இலங்கையில் பிரிவினை தடை செய்யப்பட்டுள்ளதால் அரசியல் கட்சி என்ற அடிப்படையில் பிரிவினை கோரமுடியாது என்று தமிழரசுக் கட்சியும் கூட்டமைப்பும் கூறிவருகின்றன. உலகத்தின் எந்தப்பகுதியிலும் பிரிந்து செல்லும் உரிமைக்கான கோரிக்கை பிரிவினை அல்ல என்ற அடிப்படையில் தடைசெய்யப்படவில்லை என மாவை சேனாதிராசாவிற்குத் தெரியவில்லை.
ஜெயலலிதா போன்றே தீர்மானங்களை நிறைவேற்றும் தமிழரசுக் கட்சி தமது இறுதிக் குறிக்கோளில் சிங்கள பௌத்த அரசின் அடிமையாவதையே முன்மொழிகிறது. மாவை சேனாதிராசாவைன் முழுமையான உரை கீழே:
‘இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாடு கடந்தவாரம் வவுனியாவில் நடைபெற்று முடிவடைந்திருக்கின்றது. இதன் போது பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. அன்றடாம் தமிழ் மக்கள் எதிர்நோக்கி வருகின்ற நடைமுறைப் பிரச்சினை நிறுத்தப்பட்டு நிரந்தர அரசியல் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இங்கு நில ஆக்கிரமிப்புக்கள், சிங்கள மயமாக்கல், இராணுவ மயமாக்கல் நிறுத்தப்பட்டு அகதிகளாக இடம்பெயர்ந்திருக்கின்றவர்கள் தமது சொந்த நிலத்தில் குடியமர்த்தப்பட்டு தொழில் நடவடிக்கைகளுக்கும் அனுமதிக்கப்பட வேண்டுமென்றும் இதற்கு இங்கிருந்து இரானுவம் வெளியேற வேண்டுமென்றும் தீர்மானம் எடுத்திருக்கின்றோம். இந்நிலையில் இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் எத்தனையோ ஆண்டு காலம் எத்தகையோ அரசாங்ககங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கின்றது. அதே வேளையில் ஏன் மஹிந்த ராஐபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துடனும் பேசியிருக்கின்றோம். இந்தப் பேச்சுவார்த்தையின் போது திட்டவட்டமான நல்லெண்ணமோ திடசங்கற்பமோ எதனையும் அரசாங்கம் வெளிப்படுத்தியிருக்கவில்லை. அதாவது கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது அரசின் வேண்டுகோளுக்கு அமைவாக முன்வைக்கப்பட்ட பிரேரணைகள் 18 சுற்றுப் பேச்சு வார்த்தைகளின் பின்னர் குறிப்பாக ஒருவருடத்தின் பின்னராக எந்தவிதத் தீர்வுகளும் இல்லாமல் அரசாங்கவே வெளியேறிச் சென்றது. ஆனால் தற்போது மீண்டும் பேசுவதற்குத் தயாரென்று ஐனாதிபதி மஹிந்த ராஐபக்ஷ கூறியிருக்கின்றார். இதன் போது பொலிஸ் அதிகாரம் தவிர்ந்த ஏனையவை தொடர்பில் பேசப்போவதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். இவ்வாறு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ள நிலையில் மக்கள் எதிர்நோக்குகின்ற அன்றாடப் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் பதிலளித்துவிட்டு அதனை இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும். இதனூடாக பேச்சுவார்த்தைக்கான சூழல் ஏற்படுத்த வேண்டும். அந்தச் சூழல் பேச்சுக்கான சூழலாக அமைந்து பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட வேண்டும். இதே வேளையில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் குறிப்பிட்டது போன்று அரசுக்கும் கூட்டமைப்பிற்கும் இடையில் பேச்சு நடைபெற வேண்டுமாயின் அதில் மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தம் அவசியமாகும். ஏனெனில் கடந்த காலங்களிலுதம் இரண்டு தரப்பினர்களுக்கும் இடையே இவ்வாறான பேச்சுக்கள் நடைபெற்றிருந்தது. அதில் அரசாங்கம் அக்கறையில்லாமல் செயற்பட்டதுடன் அதே மனோ நிலையுடனேயே தற்போதும் இருந்து வருகின்றனர். இத்தகைய நிலைமைகள் காரணமாகவே மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் வேண்டுமென நாம் வலியுறுத்தி வருகின்றோம். இவ்வாறு மூன்றாம் தரப்பு மத்தியஸ்துடன் இரு தரப்பு பேச்சுவார்த்தைக்கு நாம் தயாராகவே இருக்கின்றோம். இதற்குரிய சூழலை அரசாங்கம் ஏற்படுத்திக் கொண்டு சர்வதேச சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நீடித்து நிலைத்து நிற்கக் கூடிய அரசியல் தீர்வைக் காண வேண்டும்.’