Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மகிந்தவின் வருகையைக் கண்டித்து தீக்குளிப்பு

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சேலத்தில் ஆட்டோ டிரைவர் இன்று அதிகாலை தீக்குளித்துள்ளார்.

சேலம் நெத்திமேடு அருகே உள்ள காமராஜர் நகரைச் சேர்ந்த ஷேர் ஆட்டோ டிரைவர் விஜயராஜ். இன்று அதிகாலை 5 மணி அளவில் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஷேர் ஆட்டோ நிலையத்துக்கு சென்றுள்ளார். அப்போது அவர் தமது ஆட்டோவில் வைத்திருந்த பெட்ரோல் பாட்டிலை எடுத்தார்.

அதன் பின்னர் “இந்தியாவுக்கு ராஜபக்ச வருவதைத் தடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தி தமது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார் அவர் உடல் முழுவதும் தீ பற்றி எரிய அருகே இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர்.

இது தொடர்பாக 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர் சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவரது உடலில் 80 விழுக்காட்டுக்கும் அதிகமாக தீக்காயம் இருப்பதால் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தாம் தீக்குளித்தது குறித்து விஜயராஜ் கூறுகையில், ராஜபக்ச இந்தியா வருவதை யாரும் விரும்பவில்லை. இதனால் அவரது வருகையை தடுக்க வேண்டும், இதை வலியுறுத்தி தான் நான் தீக்குளித்தேன் என்றார்.

Exit mobile version