Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மகிந்தவின் வரவுசெலவுத்திட்டம் நிறைவேறியது, மைத்திரிபால வாக்களிக்கவில்லை!

maithiripalaமகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் 2015 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றத்தில் 95 அதிகபடியான வாக்குகளால் வெற்றியடைந்துள்ளது. இலங்கை மகிந்த குடும்ப அரசின் தரப்பிலிருந்து பெரும்தொகையான பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சிக்குத் தாவவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

57 உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டதிற்கு எதிராக வாக்களித்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி ஆகிய கட்சிகள் எதிராக வாக்களித்தன.

மகிந்தவிற்கு எதிராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் மத்திரிபால் சிறிசேன உட்பட ஆளும் கட்சியிலிருந்து கட்சி தாவிய ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கூடவே அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஜாதிக ஹெல உறுமைய கட்சியும் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
முன்னதாக வாக்களிப்பில் மகிந்த குடும்ப ஆட்சி தோல்வியடைந்தால், பாராளுமன்றம் கலைக்கபடலாம் என்று எதிர்வுகூறப்பட்டது. இந்த நிலையிலும் வாக்கெடுப்பில் எதிரணியில் இணைந்துகொண்ட ஆளும் கட்சி உறுப்பினர்கள் எவரும் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமை பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

எதிரணியில் இணைந்து கொண்ட மகிந்த ராஜபக்சவிற்கு இணையான பேரினவாதிகள் இதுவரை மகிந்தவிற்கு எதிரான வலுவான குற்றச்சாட்டுக்கள் எதனையும் முன்வைக்கவில்லை. மேலோட்டமான சில தகவல்களை மட்டுமே முன்வைத்துள்ளனர். அதே வேளை ஒடுக்கப்படும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் மத்தியிலிருந்து உரிமைகள் தொடர்பாக எதிர்க்கட்சியிடம் கோரிக்கைகளை முன்வைப்பதற்கு வலுவான அரசியல் தலைமைகள் எதுவும் காணப்படவில்லை. புலம்பெயர் நாடுகளிலிருக்கும் அரசியல் பிழைப்புவாதிகள் தலைமைக்கான வெற்றிடம்ஏற்படுவதற்கு முக்கியமான காரணமாக இன்றும் காணப்படுகின்றனர்.

இலங்கையில் மகிந்தவை மையப்படுத்தி பேரினவாதிகளுக்கு எதிரான அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்புவதை மேலும் பின்னடையச் செய்யும் இன்றைய அரசியல் தலைமைகள் வாழும் வரை அழிவுகளே எஞ்சும்.

Exit mobile version