ஜனாதிபதியின் பதவியேற்பு உரையில் இனநெருக்கடிக்கான அரசியல் தீர்வு குறித்தோ, இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் குறித்தோ, மக்களின் துன்பங்கள் குறித்தோ எவையும் உள்ளடக்கப்பட்டிருக்காதது ஏமாற்றம் அளிப்பதாக தமிழ்த் தேசியக் கூடடமைப்பு மாவை சேனாதிராஜா பத்திரிகைகளுக்கு தெரிவித்திருக்கிறார். இருப்பினும் 19 ஆம் திகதியின் பின்னர் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அவர் முன்னர் தெரிவித்திருந்த அடிப்படையில் எம்முடன் பேசுவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம் எனவும் மாவை தெரிவித்திருக்கிறார். இதே வேளை, எதிர்வரும் 25 ஆம் திகதி இலங்கை வரும் இந்திய வெளியுறவு அமைச்சரை சந்தித்துப் பேச்சு வார்த்தை நடாத்த த.தே.கூ. எதிர்பார்ப்பதாகவும் மாவை தெரிவித்திருக்கிறார்.
ஜனாதிபதியின் இரண்டாவது பதவியேற்பின் போது தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தீர்க்கமான விடயங்களை அறிவிப்பார் என நாம் எதிர்பார்த்தோம். அத்துடன் தமது பிரச்சினைக்குத் தீர்வு காணமாட்டாரோ என்று தமிழ் மக்கள் மத்தியில் காணப்பட்ட சந்தேகத்தையும் அவராகவே உறுதி செய்துள்ளார் என புளொட் தலைவர் சித்தார்த்தன் தெரிவித்திருக்கிறார். மேலும் எமது கட்சியைப் பொறுத்தவரையில் இன்றைய ஜனாதிபதியே தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பார் என்ற நம்பிக்கையில் அவருக்கு வாக்களித்திருந்தோம் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.
சித்தார்த்தன், தமிழக் கட்சிகள் அனைத்தும் இணைந்து இனப்பிரச்சினைக்கான தீர்வை ஜனாதிபதி காணவேண்டும் என்ற அழுத்தத்தை வழங்க வேண்டும். இதற்காக அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த நிலைப்பாட்டைக் கொண்டு செயற்பட்டால் அதனை ஜனாதிபதியால் தட்டிக்கழிக்க முடியாது எனவும் தெரிவித்திருக்கிறார்.
த.தே.கூ.பின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வினை இன்றைய ஜனாதிபதி காண்பாரா என்று தமிழ் மக்கள் மத்தியில் எழுந்திருந்த சந்தேகத்தை அவர் நிரூபிப்பது போன்றே அவர் உரை அமைந்திருந்தது எனத் தெரிவித்திருப்பதுடன், தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழத் தேசியக் கூட்டமைப்பினருடன் உடனடியாகப் பேசவேண்டும். தமிழ் மக்கள்pன் அபிலாஷைகளைத் தீர்க்கும் வகையில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்த தீர்வினை அவர் விரைவாகக் காண வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார்.
சிவாஜிலிங்கம், தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் இணைந்துதான் இணைந்த வடக்கு, கிழக்கைப் பெறவேண்டும் என்பதனை எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஓரினம் இன்னொரு இனத்தின் மீது மேலாதிக்கம் செலுத்தி இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. எனவே அனைத்து விடயங்களிலும் நாம் ஒற்றுமைப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார்.
த.தே.கூட்டமைப்பு ஸ்ரீதரன், கடந்த காலங்களைப் போல அல்லாமல் சாத்வீக வழியில் எமது கொள்கைகளை வென்றெடுக்க வேண்டிய தேவை எமக்குண்டு, நாங்கள் கல்வியினூடாக அறிவு ரீதியாக எமது இலட்சியங்களை அடைய வேண்டும். கடந்த 60 வருடங்கள் அரசியல் ரீதியாகவும் ஆயுத ரீயாகவும் போராடிப்பார்த்தோம். இனி அறிவு ரீதியாகப் போரடிப்பார்ப்போம், அறிவு ரீதியாகப் போரடிய எந்த இனமும் வரலாற்றில் தோற்றுப்போனதில்லை எனத் தெரிவித்திருக்கிறார்.
டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதிக்கு நல்லாசிகள் வேண்டி சிறப்பு பூசை வழிபாடுகளில் தனது சகாக்களுடன் கலந்து கொண்டிருக்கிறார். டக்ளஸ் தேவானந்தா, மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது தடவையாக பதவியேற்றுள்ள நிலையில் அவருக்கு தெய்வ ஆசிவேண்டி இந்த சிறப்பு பூசை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவருடைய அரசு தொடர்ந்தும் மக்களுக்கு நல்ல பல சேவைகளைச் செய்ய வேண்டுமென்றும் அப்பணியை ஜனாதிபதி திறம்படச் செய்வார் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை திருகோணமலையில் காணமல்போன மற்றும் கடத்தப்பட்டோரின் பெற்றோர் சங்கத்தினர், காணமல்போன மற்றும் கடத்தப்பட்ட தமது உறவுகளை விடுவிக்கக் கோரி இறைவழிபாட்டு நிகழ்வுகளை நடாத்தியுள்ளனர். வழிபாட்டு நிகழ்வுகளை பாதிக்கப்பட்ட 50 பேரளவிலான மக்கள் அன்புவழிபுரம் சகாய மாதா ஆலயத்திலும், ஞானவைரவர் ஆலயத்திலும், அபயபுர சந்தியிலுள்ள புத்தர் சிலை முன்பாகவும் நடாத்தியிருந்தனர். அபயபுரத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த வேளை சிங்கள மக்கள் புத்தர் சிலையை மூடியிருந்த கண்ணாடியைத் திறந்து வழிபடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தனர்.
இதே சமயம், பெற்றோரால் தொடர்ந்து தேடப்பட்டு இதுவரை கண்டுபிடிக்கப்படாதோர் குறித்து தமக்கு எதுவும் தெரியாது எனவும், கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக காணமல்போன அனைவருக்கும் மரணச்சான்றிதழ் வழங்கப்படவுள்ளதகவும் சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.யூ.குணசேகர தெரிவித்ததாக யாழ்.அரச அதிபர் திருமதி. இமெல்டா சுகுமார் கொழும்பில் நடைபெற்ற அரச அதிபர்கள் மாநாட்டின் பின் ஊடகங்களுக்குத் தகவல் தெரிவிக்கையில் தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்துள்ள கொழும்புப் பல்கலைக்கழகத்தின் அரசியல், விஞ்ஞானம் மற்றும் பொதுக்கொள்கைகள் பிரிவின் தலைவர் கலாநிதி எஸ்.ஐ. கீத பொன்கலன், ‘ … தமிழ் சமூகத்தின் சார்பாக மன்னிப்புக் கோரும் உரிமை எனக்கு உண்டா என்பது குறித்து எனக்கு தெரியாது. ஆனால், நாட்டின் நிலையான அமைதிக்கும் நல்லிணக்கத்துக்கும் மன்னிப்புக் கோருவது வழிகோலும் என நம்பி தமிழ் மக்களின் பேரால் இடம் பெற்ற வன்முறைகளுக்காக தனிநபராக எனது மன்னிப்பைக் கோர விரும்புகின்றேன்.” எனத்தெரிவித்திருப்பதுடன் அரசயில் பிரச்சினைகள் குறித்து தனது கருத்துக்களை முன்வைத்ததுடன் சில ஆலோசனைகளையும் முன்வைத்துள்ளார். முக்கியமாக, ‘அதிகாரப் பரவலாக்கத்திற்கான திருப்திகரமான திட்டமாக 13 ஆவது அரசியல் திருத்தம் அமையாத காரணத்தினால் நாட்டின் ஒற்றையாட்சி முறைக்கு அப்பால் செல்லக்கூடிய அரசியலமைப்பை மறுசீரமைப்பதன் மூலம் புதிய திட்டங்களையும் கட்டமைப்பைகளையும் வடிவமைக்க வேண்டிய தேவை உள்ளது” எனத் தெரிவித்திருக்கிறார்.
அண்மைக்காலத்தில் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் அளித்த சாட்சியம் தொடர்பாக பலத்த கண்டனங்களைப் பெற்றவர் யாழ்.அரச அதிபர் திருமதி. இமெல்டா சுகுமார். இது குறித்து வீரகேசரிக்கு கடிதம் எழுதியிருக்கிற கோணமலையான், ‘ உயர் பதவி வகிக்கும் ஓர் தமிழ் அரச அதிகாரி வன்னியில் இறுதிக் கொடூர சம்பவங்கைள மறைத்து மனச்சாட்சிக்கு விரோதமாகவும் தொடர் பதவி ஆசையில் மிக சுயநலப் போக்கிலும் தானும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாடசியமளித்துள்ளேன் என்பதைப் பதிவு செய்வதற்காகவும் பிரபல்யத்திற்காகவும் எவ்வாறன சுயநல மாற்று சக்திக்கு காக்க பிடிக்கும் விதமாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் மன உணர்வுகளையும் கஷ்டங்களையும் மறைத்துள்ளார்” எனத் தெரிவித்திருக்கிறார்.
மேலும் ‘ புலிகளின் கடற்படைத் தளபதியின் சொகுசு வாகனத்தில் இவர் எத்தனை தடவை பயணம் செய்திருப்பார். மனச்சாட்சிப்படி அதனையும் கூறியிருக்கலாமே அல்லது அந்த நிகழ்வு நடந்த போது அதனைத் தவிர்த்திருக்கலாம்தானே” எனவும் தெரிவித்திருக்கிறார்.