இலங்கை ஆட்சியாளர்களின் சரிதத்தைக் குறிப்பதாகக் கூறப்படும் மகாவம்சத்தின் புதிய வெளியீட்டில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மூன்று அத்தியாயங்கள் ஒதுக்கப்படவுள்ளன. இலங்கை கலாச்சார விவகார அமைச்சு இதனை இன்று அறிவித்துள்ளது.
கி.மு 543 ல் விஜயன் இலங்கைக்கு வந்தது முதல் மகாசேனன் மன்னனின் ஆட்சிக்காலம் வரை மகாவம்சம் விபரிக்கிறது.
அதனுடன் இணைக்கப்பட்ட குலவம்சம் மற்றும் சூலவம்சம் ஆகியவை நான்காம் நூற்றாண்டு முதல் பிரித்தானியர்கள் 1815 இல் இலங்கையை கைப்பற்றும் காலம் வரையிலான சரிதத்தை விபரிக்கிறது என்று இலங்கை கலாச்சார அமைச்சின் செயலாளர் விமல் ரூபசிங்க கூறினார்.
அதனையடுத்து முன்னணி எழுத்தாளர்களால், அதனது 6 வது பாகத்தில் 1978 முதல் 2010 வரையிலான காலப்பகுதி குறித்து எழுதப்பட்டு வருவதாகவும், அதில் மஹிந்த ராஜபக்ஷ அவர்களது காலப்பகுதிக்காக மூன்று அத்தியாயங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
30 வருடகால பிரிவினைவாதப் போரை முடிவுக்கு கொண்டு வந்த ராஜபக்ஷவின் ஆற்றலுக்கு இணையாக மகாவம்சத்தில் எதுவும் கிடையாது என்று அவர் கூறியுள்ளார்.
இந்துக்களின் இதிகாசக் கதைகளுக்கு ஈடான புனைவுகளைக் கொண்ட மகாவம்சத்தின் பல கற்பனை அம்சங்கள் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தையும் இலங்கை அரச பாசிசத்தையும் வளர்ப்பதற்குத் துணை புரிந்துள்ளன.
பிரித்தானிய அரசு சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை உருவாக்கி தமிழ் மக்களை ஒடுக்குவதற்கு மகா வம்சம் கருவியாகப் பயன்படுத்தப்பட்டது.