இவ்விடயம் குறித்து கிழக்கு மாகாண சபையின் விவசாயத்துறை அமைச்சர் துரையப்பா நவரெட்ணராஜா கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ளார். திருகோணமலையில் நடந்த கூட்டமொன்றில் பேசிய நவரெட்ணராஜா, ‘ஒரு கையால் கொடுத்து மறு கையால் பறிக்கும் செயலில் மத்திய அரசாங்கம் ஈடுபட்டு வருவது மிகுந்த கவலை தருகிறது” எனக் குறிப்பிட்டார். தொடர்ந்து பெசிய நவரெட்ணராஜா, இன்னும் குறுகிய நாட்களில் மூதூர் பிரதேச செயலாளர் பரிவும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டு செல்லப்படும் என்பதை உறுதியாகக் கூறுகின்றேன், ஒரே நாடு ஒரே இனம் என்ற ஜனாதிபதியின் கொள்கை மாறிக்கொண்டே செல்கிறது. தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு உரித்தான விடயங்கள் தற்போது பெரும்பான்மை இனத்தவர்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் தனது அமைச்சின் கீழுள்ள அதிகாரங்கள் சிறிது சிறதாக மாற்றப்பட்டு வருகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.
எது எவ்வாறாயினும் தமிழ்ப் பிரதேசங்களை ஆக்கிரமிக்கும் சிங்களப் பேரினவாத அரசின் நிறுவன மயப்படுத்தப்பட்ட திட்டமிட்ட செயல்களில் இதுவும் ஒன்றாகும் என கருத்து நிலவுகிறது.
கிழக்கு மாகாண சபை, அதன் தோற்றம் முதலே பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகிய போதும் அது கிழக்கு மாகாணத் தமிழர்களுக்கு கிடைத்த பெரும் வரப்பிரசாதமாக கிழக்கு முன்னாள் புலிகளும் தற்கால சனநாயக வாதிகளும் கூறித்திரிந்தனர். ஆயினும் கிழக்கு மாகாண சபை அதிகாரமற்ற ஒரு வெற்றுச் சபை என்பதனை அவர்கள் புரிந்து கொள்ளத்தக்க வகையில் செயற்பாடுகள் ஒழிவு மறைவின்றியே மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இப்போது கிழக்கு மாகாண விவசாயத்துறை அமைச்சர், ‘மாகாண அமைப்பு வடக்கிற்கும் கிழக்கிற்கும் எந்த நன்மையையும் தரவில்லை’ என்று கூறியிருக்கிறார். இதனைத்தான் வட – கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் இறுதியாக கூறிவிட்டுச் சென்றிருந்தார்.
கிழக்கு மாகாண விவசாயத்துறை அமைச்சர், தான் முன்னர் நடாத்தி வந்த மருத்துவ நிலையத்தை கொழும்பிலா அல்லது வெளிநாட்டிலா நடாத்துவது எனத் தீவிரமாக யோசிப்பதாகக் கூறியிருக்கிறார்.
மாகாண சபை, அமைச்சர் பதவி, உள்ளூராட்சி என்ற அனைத்து அரச இயந்திரத் தொகுதிகளும் இனச் சுத்திகரிப்பை நியாயப்ப்படுத்தும் அங்கங்களாக தொழிற்பட்டு வருகின்றன என்பது ஈழத்தமிழர்கள் ஏற்கனவே உணர்ந்துள்ளனர். புலம்பெயர் நாடுகளில் வியாபார நலன்களுடைய அர்ச சார்பு ஊடகங்கள் மட்டும் அமைச்சர்களுக்கும் அரசுக்கும் ஆதரவான பிரச்சாரங்களைக் கட்ட்விழ்த்து விட்டுள்ளன.
தகவல் : விஜய்