போக்கிடமின்றி குறுகிய இலாபங்களுக்காக குமார் குணரத்தினத்தோடு தொற்றிக்கொண்ட புலம்பெயர் தமிழ் வியாபாரிகள் சிலரும் குமார் குணரத்தினத்திற்கு ஆதரவான பிரச்சாரங்களை முடுக்கிவிட்டுள்ளனர். மக்களை அணிதிரட்டுவதும் போராடுவதுமே இலங்கையில் ஜனநாயகத்தை மீளமைப்பதற்கான ஒரே வழிமுறை என்பதை போலி சோசலிஸ்ட் குமார் குணரத்தினம் குழு மறுத்து பேரினவாத அரசியல் திட்டத்திற்கு உடந்தையாகின்றது.
இலங்கையில் பிரதான முரண்பாடு தேசிய இன முரண்பாடு. சிறுபான்மைத் தேசிய இனங்களின் பிரிந்து செல்லும் அடிப்படை உரிமையை அங்கீகரிக்காத வாக்குப் பொறுக்கிகள் அனைவரும் இனவாதிகளே.
இலங்கையில் மகிந்த போன்ற பயங்கரமான கொலையாளி ஆட்சியில் அமர்வதற்கு ஒரு புறத்தில் தமிழ் இனவாதமும், மறுபுறத்தில் போலிக் கம்யூனிஸ்டுக்களும் காரணமாகினர். குர்து மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் கம்யூனிஸ்டுக்களாலேயே தலமை தாங்கப்படுகின்றது. உலகம் முழுவதிலும் ஆரம்ப நிலையிலிருந்து அழிந்து போன கம்யூனிச அரசுகள் அனைத்திலும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் பிரிந்து செல்லும் உரிமை அங்கீகரிக்கப்பட்டிருந்தது. இலங்கையில் மட்டும் ஜே.வி.பி மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சி போன்ற போலிகள் தம்மைக் கம்யூனிஸ்டுகள் என அழைத்துக் கொள்கின்றனர்.
மகிந்த அரசு தண்டிக்கப்பட வேண்டும் என்று முற்போக்கு ஜனநாயக சக்திகள் கோரிக்கை விடுப்பது இன்னொரு பேரினவாதியை ஆட்சியில் அமர்த்தும் நோக்குடன் அல்ல. மகிந்த போன்ற பயங்கரவாதி தண்டிக்கப்படாமலிருப்பது மேலும் பல கொலையாளிகளை ஊக்கப்படுத்தும் என்பதற்காகவே. குறைந்தபட்ச ஜனநாயகத்தை உறுதிப்படுத்த மகிந்த குடும்பக் கொலையாளிகள் தண்டிக்கப்படுவது மனித குலத்திற்கு அவசியமானது, ஜே.வி.பி, யூன்பி, முன்னிலை சோசலிசக் கட்சி போன்ற இனவாதக் கட்சிகள் மகிந்த குடும்பத்திற்கு மாற்றாக அமையாது.