விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் சிப்பாய்கள் இராணுவத்திலிருந்து பெருமளவில் விலகிச் செல்வதாக இராணுவத் தலைமையகத்தின் உயர் அதிகாரியொருவர் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
போர் முடிவடைந்தன் பின்னர் இராணுவத்தினருக்கு வழங்கி வந்த நிவாரணக் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ளன. அத்துடன், இராணுவச் சிப்பாய்களுக்கு நிரந்தர முகாம்கள் இல்லாது அவர்கள் வழமைப் போல பயிற்சி என்ற பெயரில் காடு, மேடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், குடிநீர், போக்குவரத்து வசதிகள் உரிய முறையில் வழங்கப்படாமல் உள்ளது.
மேற்குறிப்பிட்ட காரணங்களினால் இராணுவச் சிப்பாய்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு இராணுவத்தை விட்டு பெருமளவில் விலகிச் செல்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.
போர் இடம்பெற்றச் சந்தர்ப்பத்தில் இராணுவச் சிப்பாய்கள் இவ்வாறான நெருக்கடிகளை எதிர்கொள்வதில் ஒரு நோக்கம் இருந்ததாகவும், எனினும் தற்போது எவ்வித இலக்குமற்ற நிலையில் இவ்வாறான நெருக்கடிகள் காரணமாக இராணுவச் சிப்பாய்கள் மனோரீதியாக பலமிழந்து காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இராணுவத்தை நடத்துச் செல்வதற்கு நோக்கமொன்று அவசியம் எனக் குறிப்பிட்ட அந்த அதிகாரி, இவ்வாறானதொரு நிலை 2002 – 2005 ஆண்டு காலப்பகுதியில் சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது ஏற்பட்டதாகவும், இவ்வாறு அந்தக் காலப்பகுதியில் ஏராளமான இராணுவச் சிப்பாய்கள் இராணுவத்திலிருந்து விலகிச் சென்றதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.