Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது!

12.08.2008.

ஜார்ஜியா மீது ரஷ்யாவின் தாக்குதல் திங்களன்றும் தொடர்கிறது. போரை நிறுத்த வேண்டுமென்று அமெரிக்காவும், மேலை நாடுகளும் விடுத்த வேண்டுகோளை ரஷ்யா ஒதுக்கி விட்டது.

ஜார்ஜிய தலைநகர் பிலிசியில் உள்ள வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தையும், சிறப்புப் படைப்பிரிவு முகாமையும் ரஷ்யப் படைகள் குண்டு வீசித் தாக்கின என்று ஜார்ஜியா உள்துறை செய்தித் தொடர்பாளர் ஷோடா உடியாஷ்பிலி கூறினார். ஜார்ஜியா எல்லைப்பகுதியில் ரஷ்ய டாங்குகள் உள்ளதாக ஜார்ஜியா ஜனாதிபதி மிக்கெயில் சகாஷ் பிலி கூறினார். மத்திய ஜார்ஜியாவில் உள்ள கோரி நகரத்தின் மீது ரஷ்யப்படைகள் குண்டுகளை வீசுவதாக உடியாஷ் பிலி தெரிவித்தார்.

ரஷ்ய துருப்புகளும் டாங்குகளும் படையெடுப்புக்கு தயாராகி வருவதாக பிலிசி தகவல்கள் கூறுகின்றன. இதுவரை ரஷ்ய துருப்புகள் தெற்கு ஒசெட்டியாவை விட்டு நகரவில்லை. ஜார்ஜிய கப்பல் ஒன்றை மூழ்கடித்ததாக ரஷ்யா கூறியது. தலைநகர் பிலிசிக்கு அருகில் உள்ள ராணுவ விமான தளம் ஒன்றை ரஷ்ய விமானங்கள் குண்டு வீசித் தாக்கின.

ஜார்ஜிய படைகளின் ஆதிக்கத்தில் இருந்த தெற்கு ஒசெட்டியா பகுதிகளை ரஷ்யா கைப்பற்றி விட்டதாக சொல்கிறது. ஆனால் இன்னும் ஜார்ஜியா துருப்புகள் அங்கு உள்ளதாக ரஷ்ய அயல்துறை அமைச்சகம் கூறுகிறது.

ஜார்ஜியா போர் நிறுத்தத்திற்கு தயாராக உள்ளதாக அறிவித்துள்ள சூழலில் ரஷ்ய தாக்குதல் நடந்துள்ளது.

ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ள இயலாத ஜார்ஜியா தெற்கு ஒசெட்டியாவில் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வதாகவும் போர் நிறுத்தத்துக்கு தயார் என்றும் அறிவித்தது. ஆனால் ரஷ்யா இதை மறுத்தது. ஞாயிறு இரவு கூட ஒசெட்டியாவில் உள்ள ரஷ்ய அமைதிப்படை மீது ஜார்ஜியா துருப்புகள் துப்பாக்கி சூடு நடத்தியதாக ரஷ்யப் படைப்பிரிவு தளபதி கூறினார்.

ஒசெட்டியா பிரச்சனை

தெற்கு ஒசெட்டியா காகசிய மலைப்பகுதிகளில் உள்ள பிரதேசம். 1990-ல் தெற்கு ஒசெட்டியா ஜார்ஜியாவை விட்டு பிரிந்து சென்றது. தற்போது இப்பிர தேசத்தை மீண்டும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக சென்ற வெள்ளிக்கிழமையன்று தெற்கு ஒசெட்டியா மீது ஜார்ஜியா தாக்குதல் தொடுத்தது. மலைப் பகுதியான தெற்கு ஒசெட்டியாவில் ஜார்ஜியா மற்றும் ஒசெட்டிய இனத்தவர்கள் 70 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். ஜார்ஜியா நடத்திய தாக்குதலின் விளைவாக 40 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி விட்டனர் என்று செஞ்சிலுவைச் சங்கத்தின் பெண் செய்தித் தொடர்பாளர் கூறுகிறார்.

Exit mobile version