Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்-கருணாவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டும்:சர்வதேச மன்னிப்புச் சபை.

08.10.2008.

போர்க் குற்றங்கள் மற்றும் மனித நேயத்துக்கு எதிராகச் செயற்பட்டார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் கருணா என அழைக்கப்படும் விநாயமூர்த்தி முரளிதரனுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிறைவேற்றவேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.

ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்கவால் ஏற்படுத்தப்பட்ட வெற்றிடத்துக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் மூலம் கருணா அம்மான் நேற்று பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
பல சிறுவர்களைப் படையில் இணைத்தமை, நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்றமை, சித்திரவதைப் படுத்தியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் அவர் கடந்த காலங்களில் ஈடுபட்டதாக சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
“கருணா சட்டத்தின் முன்நிறுத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்” என சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய பிராந்தியப் பணிப்பாளர் சாம் சரிப்ஃபி தெரிவித்தார்.
“போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர் எனச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் நாடாளுமன்றத்துக்கு நுழைந்துள்ள நிலையில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்படவேண்டும் எனக் கோரிக்கை விடுக்கிறோம்” என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்பட்டு கருணாவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய பிராந்தியப் பணிப்பாளர் சாம் சரிப்ஃபி கோரிக்கை விடுத்தார்.
Exit mobile version