அக்டோபர் 14ஆம் தேதி நடைபெறவிருக்கும் காமல்வெல்த் விளையாட்டுப் போட்டியின் நிறைவுவிழாவிற்குச் சிறப்பு அழைப்பாளராக இலங்கைக் குடியரசுத் தலைவர் மகிந்த இராசபக்சேயை இந்திய அரசு அழைத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.பிரிட்டன் உள்பட காமன்வெல்த் அமைப்பைச் சேர்ந்த பல நாடுகளாலும் மற்றும் அமெரிக்க–ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகளாலும் மனித உரிமைகளை அப்பட்டமாக மீறியவர் எனப் பகிரங்கமாகக் கண்டிக்கப்பட்டவர் இராசபக்சே.டில்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி இராசேந்திர சச்சார் உட்பட பத்திற்கும் மேற்பட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களை உள்ளடக்கிய டப்ளின் மக்கள் தீர்ப்பாயம் இராசபக்சே ஒரு போர்க் குற்றவாளி எனத் தீர்ப்பளித்திருக்கிறது.இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் குறித்து விசாரிப்பதற்காக ஐ.நா. பொதுச்செயலாளர் பான்#கீ#மூன் அமைத்த விசாரணைக் குழுவை தனது நாட்டிற்குள் அனுமதிக்க மறுத்து உலக நாடுகளின் அமைப்பையே அவமதித்தவர்.இத்தகைய ஒருவரை காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் இறுதி விழாவை முடித்துவைக்க இந்திய அரசு அழைத்திருப்பது தமிழக மக்களின் வெந்த உள்ளங்களில் வேலைச் செருகுவது போன்ற வேதனையைத் தந்துள்ளது.ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டத் தமிழர்களை ஈவுஇரக்கமில்லாமல் படுகொலை செய்தவர் மட்டுமல்ல. முள்வேலி முகாம்களில் இன்னமும் 30,000க்கும் மேற்பட்டத் தமிழர்களை அடைத்து வைத்துச் சித்திரவதை செய்வதாக அண்மையில் தமிழக முதலமைச்சர் கருணாநிதியே காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியிடம் எழுத்துப் பூர்வமான புகார் அளித்திருக்கிறார்.தமிழர்களின் உணர்வுகளை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் சர்வதேச நாடுகளால் மனித உரிமை மீறல்களைச் செய்த போர்க்குற்றவாளி எனக் கண்டிக்கப்பட்ட ஒருவரை காமன்வெல்த் நிறைவு விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக அழைத்த இந்திய அரசின் செயலை தமிழர்களும், மனித நேயம் படைத்தவர்களும் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
அன்புள்ள ,
(
பழ. நெடுமாறன் )
ஒருங்கிணைப்பாளர்
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்