Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

போர்க்குற்றத்தைப் பயன்படுத்தி இராணுவத்துள் எதிர்பாளர்களை அழிக்க கோத்தா திட்டம்

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபடவேயில்லை என்று இதுவரை கூறிவந்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, தற்போது சில படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருக்கக் கூடும் என்று ஒப்புக் கொண்டுள்ளார்.
இராணுவத்தில் எதிர்ப்புக்கள் உருவகும் நிலையில் அவர்களைத் சிறையில் அடைப்பதற்கும் கொலை செய்வதற்கும் கோதாபய கும்பல் போர்க்குற்றத்தைப் பயன்படுத்தலாம் என எதிர்வுகூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தியத்தலாவவில் இராணுவக் கல்லூரியில், இலங்கை இராஜதந்திரிகள் மத்தியில் நிகழ்த்திய உரையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
போர்க்குற்றங்களில் ஈடுபட்ட படையினர் தண்டனைகளில் இருந்து தப்பிக்க முடியாது. போரின் போது, இராணுவத் தளபதிகளின் உத்தரவுக்கு கீழ்ப்படியாமல் தனிப்பட்ட ரீதியில் படையினர் சிலர் குற்றங்களைப் புரிந்திருக்கக் கூடும்.
எந்தவொரு படையினராவது குற்றவாளியாகக் காணப்பட்டால், நீதியின் முன் நிறுத்தப்படுவர். குற்றவாளிகள் தண்டனைகளில் இருந்து தப்பிப்பதாக கூறப்படுவது முற்றிலும் தவறு.
விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இராணுவத்தில் வலுவான பொறிமுறை உள்ளது. விதிமுறைகளை மீறும் அதிகாரிகளும் படையினரும் விசாரணை நடத்தப்பட்டு தண்டிக்கப்படுகின்றனர்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய, பயங்கரவாதத்திற்கெதிரான போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க இராணுவத் தளபதியும், கடற்படைத் தளபதியும் இரண்டு சிறப்பு நீதிமன்றங்களை உருவாக்கியுள்ளனர்.
பொதுமக்கள் இந்த நீதிமன்றங்களில் சுதந்திரமான முறையில் தமது சாட்சியங்களை அளிக்கலாம். எந்தவொரு தனிநபர் அல்லது குழு மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் இருந்தால், இராணுவ நீதிமன்றத்தில் அவர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்படும்.
மனிதாபிமானப் போரின் போது பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் படை நடவடிக்கையை மேற்கொள்வது என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் தெளிவாக இருந்தது.

Exit mobile version