இலங்கையில் நிராயுதபாணியான தமிழ் இளைஞர்களையும், பெண்களையும் நிர்வாணப்படுத்தி சுட்டுக் கொல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், இப்படிப்பட்ட போர்க் குற்றங்களில் சிறிலங்க அதிபர் ராஜபக்ச உள்ளிட்ட அந்நாட்டு அரசாங்கத்தினரின் பங்கு குறித்து விசாரிக்குமாறு இங்கிலாந்து (பிரிட்டன்) அரசை பன்னாட்டு பொது மன்னிப்பு (அம்னஸ்டி இண்டர்நேஷனல்) அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
இங்கிலாந்து தலைநகர் லண்டனிற்கு மகிந்த ராஜபக்ச வந்துள்ள நிலையில், அம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பின் பேச்சாளர் சாம் ஜாரிஃபி இவ்வாறாக கோரிக்கை விடுத்துள்ளார்.
“இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் மற்றும் மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட எந்த ஆதாரங்கங்களையாவது பிரிட்டன் காவல் துறை அல்லது நீதிமன்றத்தின் ஆய்வு செய்துள்ளதா? அப்படிப்பட்ட குற்றங்களில் சிறிலங்க அரசின், அதன் அதிபர் உள்ளிட்ட பொறுப்பாளிகள் எவரேனும் பன்னாட்டுச் சட்டங்களின்படி குற்றவாளிகள் என்ற கருத இடமுள்ளதா?” என்று ஆராயுமாறு சாம் ஜாரி்ஃபி கேட்டுக்கொண்டுள்ளார்.
“இதற்கு முன்பு வெளியிடப்பட்ட வீடியோவைக் காட்டிலும் இந்த வீடியோவில் அதிகமான போர்க் கைதிகளும், சிறிலங்க இராணுவத்தினரும் உள்ளனர். அதிலுள்ள பெண்களின் மீது பாலியல் குற்றங்கள் நிகழ்த்தப்பட்டதற்கான அறிகுறிகள் உள்ளது கவனிக்கத்தக்கது.” என்றும் ஜாரிஃபி கூறியுள்ளார்.
அதிர்ச்சியளிக்கிறது – ஐ.நா.சிறப்பு அறிக்கையாளர்
சானல் 4 இன்று வெளியிட்டுள்ள வீடியோ காட்சிகள் அதிர்ச்சியளிக்கிறது என்று கூறியுள்ளார் ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் கிரிஸ்டோஃப் ஹெய்ன்ஸ். சட்டத்திற்குப் புறம்பான கொலைகள், விசாரணையற்ற தண்டனைகள், ஆகியவற்றை ஐ.நா. பொதுச் செயலருக்கு அறிக்கையாக அளிக்கும் அதிகாரம் பெற்ற கிரிஸ்டோஃப் ஹெய்ன்ஸ், அதிர்ச்சியளிக்கும் வீடியோ காட்சிகள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
சானல் 4 தற்போது வெளியிட்டுள்ள வீடியோ காட்சிகளில் பிணைக்கப்பட்டு, கொல்லப்பட்ட பெண்கள் பகுதியை வெளிப்படுத்தாமல் தவிர்த்துள்ளது. இது குறித்து பேசிய அந்த இணையத்தளத்தின் செய்தியாளர் ஜோநாதன் மில்லர், “இந்த வீடியோவின் ஒரு பகுதி மிகக் கொடூரமான காட்சிகள் கொண்டது. பெண்கள் பிணைக்கப்பட்டு, ஆடைகள் அகற்றப்பட்ட நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். காம இச்சைகள் கலந்த வார்த்தைகளால் அங்கிருந்தவர்கள் (சிறிலங்க படையினர்) பேசியுள்ளனர்” என்று கூறியுள்ளார்.
“இந்த வீடியோ காட்சி ஐந்தரை நிமிடம் ஓடுகிறது. இது உண்மையான படப்பதிவுதானா என்பதை உறுதி செய்யுமாறு ஐ.நா.வின் விசாரணைக் குழுவிற்கு அனுப்பியுள்ளோம்” என்று ஜோநாதன் மில்லர் கூறியுள்ளார்.