Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச ஆணைக்குழு ஒன்றின் விசாரணை அவசியம்:HRW

இலங்கை படையினர் என்று கூறப்படுபவர்களால், தடுத்து வைக்கப்பட்டிருந்த சிலர் கொல்லப்படுவதாக குற்றஞ்சாட்டி அண்மையில் வெளியாகியிருக்கின்ற வீடியோ காட்சிகள், இலங்கையில் இடம்பெற்றிருக்கக் கூடிய போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச ஆணைக்குழு ஒன்றின் விசாரணை அவசியம் என்பதை கோடி காட்டுவதாக, ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு கூறியிருக்கிறது.

கடந்த பல வருடங்களாக தொடர்ந்த இரு தரப்புக்கும் இடையிலான போரின் போது இரு தரப்பினாலும், போர் சட்டங்கள் மீறப்பட்டதாக முறைப்பாடுகள் பல வந்தாலும், அங்கு சுயாதீன கண்காணிப்பாளர்கள் எவரும் செல்ல அனுமதிக்கப்படாத நிலை காரணமாக அவை குறித்த உறுதியான தகவல்களை பெறமுடியாது இருந்து வந்துள்ளது என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

ஆகவே இரத்தக்களரி மிகுந்த இலங்கை போரில் இடம்பெற்ற குற்றங்கள் குறித்து ஆராய சுயாதீனமான சர்வதேச விசாரணை ஆணையம் ஒன்று தேவை என்றும் அது வலியுறுத்தியுள்ளது.

இதற்கிடையே, ஊடகங்களில் வெளியான இந்த வீடியோ ஒளிக்கீற்று போலியானது என்று மீண்டும் மறுத்திருக்கின்ற இலங்கை அரசாங்கம், இது குறித்த செய்தியை முதலில் வெளியிட்ட ”சானல் 4” நிறுவனத்துக்கு எதிராக பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் முறைப்பாடு செய்யப்ப்போவதாக கூறியுள்ளது.

இது குறித்து இராஜதந்திர ரீதியிலான முறையான கண்டனத்தை பிரித்தானிய அரசாங்கத்திடம் தெரிவிக்கவிருப்பதாக இலங்கையின் அமைச்சரவைப் பேச்சாளரான அநுர பிரிய தர்சன யாப்பா அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

BBC

Exit mobile version