05.03.2009.
சுடானின் அதிபர் ஒமார் அல் பஷீர் மீது பிடி ஆணை ஒன்றை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது.
தார்பூரில் பொதுமக்கள் மீது அவரது அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதிலளிக்க வேண்டும் என்று தி ஹேக்கிலுள்ள நீதிமன்றம் கேட்டிருக்கிறது.
போர்க்காலக் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் என மொத்தம் 7 குற்றச்சாட்டுகளுக்கு அதிபர் பஷீர் பதிலளிக்க வேண்டும் என அனைத்துலக குற்றவியல் நீதிபதிகள் தீர்மானித்திருக்கிறார்கள்.
குறிப்பிட்ட இனங்கள் இலக்குவைத்து அழிக்கப்பட்டமைக்கு ஆதாரங்கள் போதாது என நீதிபதிகள் கருதியதால், இன ஒழிப்பு குற்றச்சாட்டு குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்படுவதை அவர்கள் நிராகரித்தார்கள்.
நீதிமன்றத் தீர்ப்பை கண்டனம் செய்து சுடானிய பொதுமக்கள் தலைநகர் கார்டூம் வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.
அதிபர் அல் பஷீர் மீது கொண்டுவரப்பட்ட வழக்கின் நடுநாயகமான விஷயம் என்று தான் கருதும் இனப்படுகொலை குற்றச்சாட்டை நீதிமன்றம் சேர்க்காதபடியால் அதிபர் மீதான நீதிமன்ற வழக்கு பலவீனமடைந்திருக்கிறது என அதிபர் அல் பஷீரின் சட்ட ஆலோசகர் குழுவின் வழக்கறிஞர் ஒருவர் கூறியிருக்கிறார்.
கொடுமைகள் இழைப்போர் நீதிமன்றங்களில் நிறுத்தப்படுவர் என்று அமெரிக்க ராஜாங்க திணைக்களம் தெரிவித்திருக்கிறது. ஆனாலும் நீதிமன்றத்தின் பிடி ஆணை பற்றி ஆப்பிரிக்க ஒன்றிய அதிகாரி ஒருவர் பேசுகையில், தார்பூரில் சமாதானத்தை உருவாக்க பல தடைகளை சந்தித்துவரும் சமாதான முயற்சிகளுக்கு இந்த நீதிமன்ற பிடி ஆணை ஒரு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்று தெரிவித்தார்.
இந்தப் பிடி ஆணையை ஒத்திவைக்கும்படி எகிப்திய அரசு கோரிக்கை எழுப்பியிருக்கிறது.
இது மிகவும் ஆபத்தான ஒரு முன்மாதிரி என ரஷ்யா தெரிவித்திருக்கிறது.
பயங்கர குற்றங்களை இழைத்தால் அதிபர்கள் கூட சட்ட நடவடிக்கையிலிருந்து விதிவிலக்கல்ல என்பதை நீதிமன்ற முடிவு காட்டியிருக்கிறது என ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் மனித உரிமைகள் இயக்கம் கூறியிருக்கிறது