தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான சிறிலங்க அரசு நடத்தி வரும் போரில் அப்பாவிப் பொதுமக்கள் பலியாவதால் இருதரப்பினரும் போரை நிறுத்த வேண்டும் என ஐரோப்பிய யூனியன் விடுத்த கோரிக்கையை சிறிலங்க அரசு ஏற்க மறுத்துள்ளது.
இதுதொடர்பாக சிறிலங்க அரசின் நிவாரண சேவைகள் மற்றும் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான அமைச்சர் மகிந்த சமரசிங்க நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் படையினர் வெற்றி பெற்றுள்ளனர். போரின் இறுதிக் கட்டம் நெருங்கி விட்டது.
இந்நிலையில் போரை நிறுத்துமாறு ஜரோப்பிய ஒன்றியம் அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. சிறிலங்க அரசுக்கு கோரிக்கை விடுக்கும் ஐரோப்பிய ஒன்றியம், புலிகள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரணடைய வேண்டும் என்று ஏன் கோரிக்கை விடுக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியதாக புலிகள் ஆதரவு இணையதளமான புதினம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதேவேளை, கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் விளக்கமளித்த பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல, விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே வைத்து சரணடைந்தால் போர் நிறுத்தம் என்ற சொல்லைக்கூட அனைத்துலக நாடுகள் உச்சரிக்க வேண்டிய தேவை இல்லை என்று கூறியுள்ளார்.