( உ.ரா.வரதராஜன் உடலை அடையாளம் காண வருகிறார் அவரது மனைவி சரஸ்வதி -நடுவில்).
சென்னை போரூர் ஏரியில் மீட்கப்பட்ட உடல் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் உ.ரா.வரதராஜனுடையது என அவரது மனைவி சரஸ்வதி அடையாளம் காட்டினார்.
இருந்தாலும், இதை உறுதிப்படுத்தும் வகையில் மரபணு சோதனை (டி.என்.ஏ.) மற்றும் விரல் ரேகை சோதனை நடத்த போலீஸôர் முடிவு செய்துள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக இருந்தவர் உ.ரா.வரதராஜன். வில்லிவாக்கம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வாகவும் இருந்தவர்.
இவரது மனைவி சரஸ்வதி ரிசர்வ் வங்கியில் அலுவலராகப் பணியாற்றுகிறார்.
இந்நிலையில் கடந்த 10}ம் தேதி முதல் வரதராஜனை காணவில்லை. அவரது செல்போன் எண்ணில் குடும்பத்தினர் மற்றும் கட்சிப் பிரமுகர்கள், நண்பர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை.
குடும்பப் பிரச்னை காரணமாக இவர் வீட்டை விட்டு வெளியேறியதாகக் கூறப்பட்டது. கடந்த 15}ம் தேதி இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இவரது மனைவி சரஸ்வதி அளித்த புகாரை கட்சியின் மூத்த தலைவர்கள் தமிழக டிஜிபி லத்திகா சரணை சந்தித்து கொடுத்தனர்.
குடும்பப் பிரச்னை, கட்சி மேலிடம் எடுத்த ஒழுங்கு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட இவர் மாயமானது தமிழகத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
வரதராஜன் மாயமானதையடுத்து தமிழகம் முழுவதும் போலீஸôர் உஷார்படுத்தப்பட்டனர்.
கொல்கத்தாவில் உள்ள அவரது சகோதரி மற்றும் நெருங்கிய நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளாரா எனவும் போலீஸôர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையில் உ.ரா.வரதராஜன், “தனது சொத்துகளை கட்சியின் வசம் ஒப்படைக்குமாறும், தனது சடலத்தை மருத்துவக் கல்லூரி ஆய்வுக்காக வழங்க வேண்டும் என்றும்’ கடிதம் எழுதி வைத்துள்ளதும் தெரியவந்தது.
எனினும் கடந்த 10 நாள்களாக வரதராஜன் குறித்து எவ்வித உறுதியான தகவலும் கிடைக்கவில்லை.
இதற்கிடையே கடந்த 13-ம் தேதி போரூர் ஏரியில் இருந்து 55 வயது மதிக்கத்தக்க நபரின் உடலை போலீஸôர் மீட்டனர்.
இது வரதராஜனின் உடலாக இருக்கலாமோ என்று போரூர் போலீஸôருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து, உடனே அவரது வளர்ப்பு மகன் அரவிந்த் பிரகாஷை போலீஸôர் அழைத்துச் சென்று ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் பிணவறையில் உள்ள சடலத்தை ஞாயிற்றுக்கிழமை காண்பித்தனர்.
ஆனால், சடலம் மிகவும் அழுகிய நிலையில் இருந்ததால் அவரால் அடையாளம் காண முடியவில்லை. பின்னர் அவரது மனைவி சரஸ்வதி மற்றும் கட்சி நிர்வாகிகள் சடலத்தைப் பார்வையிட்டனர். அந்த உடல், வரதராஜனுடையதுதான் என்பதை அவரது மனைவி சரஸ்வதி உறுதி செய்ததாகப் போலீஸôர் தெரிவித்தனர்.
மரபணு சோதனை நடத்த வலியுறுத்தல்: இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சில அங்க அடையாளங்களைக் கொண்டு இது அவரது சடலம் என்று கண்டறியப்பட்டுள்ளது. அவரது மனைவி சரஸ்வதியும் இதுகுறித்து தெரிவித்துள்ளார்.
ஆனால், நூறு சதவீதம் இதை உறுதி செய்ய வேண்டுமெனில், விரல் ரேகை மற்றும் மரபணு சோதனை செய்ய வேண்டும் என போலீஸôர் தெரிவித்தனர்.
இந்தச் சோதனை முடிவுகள் வெளிவர இன்னும் 3 நாள்கள் காத்திருப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சோதனைகளை நடத்த காவல் துறையிடம் கோரப்பட்டுள்ளது என்றார் ராமகிருஷ்ணன்.
கட்சியினர் மற்றும் வரதராஜனின் சகோதரியும் மரபணு சோதனை நடத்த ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பிரேதப் பரிசோதனை நடத்துவது திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ராயப்பேட்டை மருத்துவமனையின் பிணவறை சுற்றுப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-Dinamani-