29.03.2009.
இலங்கையில் நடைபெற்று வரும் போரினால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதிகரித்து வரும் யுத்த விதவைகளின் எண்ணிக்கை அதிர்ச்சியடைய வைப்பதுடன் அவர்களில் பெருமளவானோர் 30 வயதுக்குட்பட்டவர்கள் என்ற தகவல் அவர்களின் எதிர்காலம் குறித்த அச்சத்தையும் அதிகரித்துள்ளது.
தொடரும் யுத்தம், கடத்தல், காணாமல் போதல் போன்ற செயற்பாடுகளால் விதவைகளை அதிகம் கொண்ட மாகாணங்களாக வடக்கும், கிழக்கும் காணப்படும் நிலையில் இந்த யுத்த விதவைகளினால் தமிழினம் சமூக, கலாசார, பண்பாடு ரீதியாக பாரிய நெருக்கடிக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளது.
கடந்த வாரம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத் திரன், வடக்கு கிழக்கில் 85 ஆயிரம் விதவைகள் உள்ளனர். இவர்களில் 45 ஆயிரம் பேர் யுத்தத்தால் விதவைகளானவர்கள். இதில் கிழக்கில் 24 ஆயிரம் யுத்த விதவைகளும் வடக்கில் 21 ஆயிரம் யுத்த விதவைகளும் உள்ளனரெனத் தெரிவித்திருந்தார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள 85 ஆயிரம் விதவைகளில் 49 ஆயிரம் பேர் கிழக்கு மாகாணத்தையும் 36 ஆயிரம் பேர் வடக்கு மாகாணத்தையும் சேர்ந்தவர்கள். கிழக்கிலுள்ள 49 ஆயிரம் விதவைகளில் 24 ஆயிரம் பேர் யுத்த விதவைகள். அதேபோல் வடக்கு மாகாணத்திலுள்ள 36 ஆயிரம் பேரில் 21 ஆயிரம் பேர் யுத்த விதவைகள் என்பது யுத்தத்தின் கொடூரத்தை வெளிப்படுத்தி நிற்கின்றது.
இந்தக் கணக்கின் அடிப்படையில் இலங்கையில் விதவைகளை அதிகம் கொண்ட மாகாணமாக கிழக்கு மாகாணம் தெரிவு செயப்பட்டுள்ளது. ஆனாலும் தற்போது வடக்கில் இடம்பெற்றுவரும் அழிவுகளை நோக்குமிடத்து மிகவிரைவில் முதலிடத்தை வடக்கு மாகாணம் கைப்பற்றி விடுமென்பது மிகச் சுலபமாக புரிந்து கொள்ளக் கூடியதொன்றாக உள்ளது.
இதேவேளை ஐ.நா.வெளியிட்ட அறிக்கை யொன்று இன்னும் பயங்கரமானதொரு புள்ளி விபரத்தை கூறுகின்றது. ஐ.நா.வின் தகவலின் படி கிழக்கு மாகாணத்தில் மட்டும் யுத்தத்தால் 49 ஆயிரம் பேர் விதவைகளாகியுள்ளதாகவும் இவர்களில் 35 ஆயிரம் பேர் 30 வயதுக்கும் குறைந்தவர்களென்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இதேவேளை கடற்கோளால் விதவைகளானவர்களின் விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
யுத்தத்தின் கொடுமையால் விதவைகளாகும் பெண்களின் எண்ணிக்கையை பார்த்து அதிர்ச்சி யடைந்துள்ள பெண்கள் அமைப்புகள் யுத்தத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டுவரவேண்டுமென வலியுறுத்தியுள்ளன. மூவின பெண்களையும் உள்ளடக்கிய 26 அமைப்புகள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளன.
இந்த அமைப்புகளின் தகவல்களின் படி 48 ஆயிரம் தமிழ் யுத்த விதவைகள் உள்ள அதேநேரம் 10 ஆயிரம் தொடக்கம் 15 ஆயிரம் வரையிலான சிங்கள யுத்த விதவைகளும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சிங்கள யுத்த விதவைகளில் அதிகமானோர் இராணுவ வீரர்களின் மனைவிமாராகவே இருப்பதாகவும் சுட்டிக் காட்டப்படுகின்றது.
இதேவேளை இவ்வாறான விதவைகளில் அதிகமானோர் இளம் பெண்களாக இருப்பதால் மிக மோசமான பாலியல் துன்புறுத்தல்களுக்கு இவர்கள் உள்ளாவதாகவும் சமூக மட்டத்தில் இவர்கள் பல்வேறு நெருக்கடிகளையும் சவால்களையும் எதிர்கொள்ள வேண்டி யேற்படுவதாகவும் சுட்டிக் காட்டப் படுகின்றது.
வடக்கு, கிழக்கு விதவைகளைப் பொறுத்தவரை அவர்கள், தொடரும் இடப்பெயர்வுகள், தொழில் வாப்பின்மை, வருமானம் போதாமை, பிள்ளைகளின் சுமை, வாழ்க்கைச் செலவு உயர்வு என்பவற்றால் மிக மோசமாகப் பாதிக்கப்படுகின்றனர். அத்துடன் உளவியல் ரீதியாகவும் சமூகவியல் மற்றும் பொருளாதார ரீதியாகவும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
வடக்கு, கிழக்கு விதவைகளைப் பொறுத்தவரையில் அவர்கள் கணவன்மாரை மட்டுமன்றி சொத்துக்களையும் அவர்கள் சார்ந்திருக்கின்ற சொந்த நிலங்களையும் வாழ்க்கையை கொண்டு நடத்த தேவையான ஆதாரங்களையும் இழந்து இன்னொரு வரில் தங்கியிருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் உள்ளனர். அத்துடன் சமூகத்தின் பழிச்சொற்களுக்கும் அஞ்சியே இவர்கள் வாழ வேண்டியுள்ளது.
தென்பகுதி விதவைப் பெண்களுக் கென அரசாங் கம் பல்வேறு புனர் வாழ்வுப் பணிகளையும் சுயதொழில் ஊக்குவிப்பு உதவி களையும், வேலைவாப்புகளையும் வழங்கிவரும் நிலையில் வடக்கு, கிழக்கு விதவைப்பெண்கள் அரசினாலும் கைவிடப்பட்டநிலையிலேயே காணப்படுகின்றனர். இவர்களுக்கான எந்தவித புனர்வாழ்வுப் பணிகளும் முன்னெடுக்கப்படவில்லை.
வடக்கு, கிழக்கில் யுத்தத்தால் பல இளம் பெண்கள் விதவைகளாகியுள்ளதாகத் தெரிவித்துள்ள ஐ.நா.இந்த இளம் விதவைகளை சீரான முறையில், அவர்களின் வாழ்வாதாரத்துக்கு தேவையான உதவிகளை வழங்கி கவனிக்காது விட்டால் அவர்கள் தற்கொலைப் போராளிகளாகக் கூட மாறும் நிலைமை ஏற்படுமென்று எச்சரித்துள்ளது.
இதேவேளை இலங்கையில் பெண்களுக் கெதிரான வன்முறைகளும் அதிகரித்தே காணப்படுகின்றன. பெண்களுக்கெதிரான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் 2008 ஆம் ஆண்டு 700 சம்பவங்களும் 2007 ஆம் ஆண்டு 800 சம்பவங்களும் 2006 ஆம் ஆண்டு 900 சம்பவங்களும் பதியப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் விஜய அமர சிங்க தெரிவித்துள்ளார்.
இதேபோன்றே குடும்பப் பிரச்சினைகள் தொடர்பாக 2008 ஆம் ஆண்டு 83 ஆயிரம் முறைப்பாடுகளும் 2007 ஆம் ஆண்டு 92 ஆயிரம் முறைப்பாடுகம் 2006 ஆம் ஆண்டு 85 முறைப்பாடுகளும் பெண்கள் மீதான சிறியளவிலான துன்புறுத்தல்கள் தொடர்பில் 2008 ஆம் ஆண்டு 2000 முறைப்பாடுகளும் 2007 ஆம் ஆண்டு 2400 முறைப்பாடுகளும் 2006 ஆம் ஆண்டு 2200 முறைப்பாடுகளும் பதிவு செயப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் விஜய அமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்பான இந்தப் பதிவு முறைப்பாடுகள் தென்னிலங்கையை மட்டுமே களமாகக் கொண்டவை. வடக்கு, கிழக்கு சம்பவங்கள் இவற்றில் அடங்கவில்லை. யுத்த சூழ்நிலைகளால் வடக்கு, கிழக்கில் எந்தவித பதிவுகளையோ, கணக்கெடுப்புகளையோ ஆவுகளையோ அரசு நடத்துவதில்லை. நடத்தவும் முடிவதில்லை.
இதேவேளை இலங்கையை பொறுத்தவரையில் பெண்களை பாதுகாப்பது தொடர்பான போதியளவான சட்ட விதிகள் இருந்தும் அந்த சட்டவிதிகளை பெண்கள் அறிந்திருப்பது மிகக் குறைவான எண்ணிக்கையாகவேயுள்ளது. தம்மை பாதுகாக்கக் கூடிய, தமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கெதிரான இந்த சட்டவிதிகளை அறிந்து கொள்வதில் பெண்கள் நாட்டம் கொள்ளவில்லையென்பதுடன் இச்சட்டவிதிகள் தொடர்பில் பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த சட்டவிதிகளை அமுலாக்கவேண்டிய பெரும்பாலான அதிகாரிகளுக்குக் கூட இந்த சட்டவிதிகள் தொடர்பில் போதிய அறிவு இல்லா நிலையே காணப்படுகின்றது. ஏதோவொரு குற்றத்தில் தெரிந்தோ தெரியாமலோ ஒரு பெண் அல்லது சிறுமி ஈடுபட்டுவிட்டால் அவர்களை கைது செயும் போது கூட அதற்கான விதிமுறைகள் பயன்படுத்தப்படுவதில்லை. இதற்கு சட்டவிதிகள் தொடர்பான தெளிவின்மையே காரணமாகும்.
பெண்களின் உரிமைகள் தொடர்பான சட்டங்களை உருவாக்கி 30 வருடங்கள் கடந்து விட்ட போதும் அதில் 10 வீதமான உரிமைகளைக் கூட வடக்கு, கிழக்கு பெண்கள் அனுபவிக்கவில்லை. பெண்களுக்கெதிரான பிரச்சினைகள், வன்முறைகள் தொடர்பில் 30 வீதமானவைகளுக்கு மட்டுமே தீர்வு காணப்படுகின்றன. மிகுதிப் பிரச்சினைகள் கவனத்திலெடுக்கப்படாமலேயே உள்ளன.
யுத்த விதவைகள் மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறைகள் விஸ்வரூபமெடுத்துவரும் நிலையில் இந்நிலைமையை தடுக்கவோ, தவிர்க்கவோ எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை. இது ஒரு சமூகம் சார்ந்த பிரச்சினையாக இருப்பதனால் இதன் தாக்கம் சம்பந்தப்பட்டவரை மட்டுமன்றி அவரில் தங்கியிருப்போரையும் பாதிப்புக்குள்ளாக்குகின்றது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 85 ஆயிரம் விதவைகள் உள்ளதாகவும் இவர்களில் 45 பேர் யுத்தத்தால் விதவைகளாக்கப்பட்டுள்ளவர்கள் என்றும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்ற போதும் இதையும் விட எண்ணிக்கைகள் அதிகமாகவே இருக்கும். ஏனெனில் இது தொடர்பான கணக்கெடுப்புகள் சீரான முறையில் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
அத்துடன் வடக்கில் தற்போது இடம்பெற்றுவரும் இராணுவ நடவடிக்கைகளினால் ஏற்பட்டு வரும் உயிரழிவுகள் இந்த எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்களவு மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது. இவை 45 ஆயிரம் யுத்த விதவைகளின் எண்ணிக்கைக்குள் இது வரை உள்வாங்கப்படவில்லை. அதனால் யுத்த விதவைகளின் எண்ணிக்கையை அறுதியிட்டு கூற முடியாது.
Thanks:Thinakkural