சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச, ஒக்ஸ்போட் சங்கத்தில் நாளை (வியாழக்கிழமை) ஆற்ற இருந்த உரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக, ஒக்ஸ்போட் சங்கமும், மகிந்த ராஜபக்சவின் செயலரும் அறிவித்துள்ளனர். அத்துடன், குறிக்கப்பட்ட நாளுக்கு முன்னரே பிரித்தானியாவைவிட்டு மகிந்த வெளியேற இருப்பதாகவும் அறிகின்றோம்.
தமிழ் மக்களை இனப்படுகொலை புரிந்த, போர்க் குற்ற நபரான சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கு பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள முதல் தோல்வியானது, திட்டமிட்ட ஒருங்கிணைப்பாலும், தமிழ் மக்களின் ஒற்றுமையாலும், விரைந்த முயற்சியாலும் ஏற்பட்ட வெற்றியின் முதற்படி என பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துக் கொள்ளுகின்றது.
மகிந்த ஒக்ஸ்போட் சங்கத்தில் உரையாற்ற பிரித்தானியாவிற்கு வருகின்றார் என்று தெரிந்தவுடனேயே, பிரித்தானிய தமிழர் பேரவை விடுத்த அழைப்பிற்கு இணங்க, மக்கள் தன்னெழுச்சியாகவும் இணைந்ததன் மூலம் இது சாத்தியமாகியது.
அமைப்புகள் ரீதியான நடவடிக்கைகளும், மக்கள் தாமாகவும் ஒக்ஸ்போட் சங்கத்திற்கு தொலைபேசி, மின்னஞ்சல் போன்றவற்றின் மூலம் மேற்கொண்ட சனநாயக எதிர்ப்பு, வானூர்தி நிலையத்தில் குறுகிய நேரத்தில் இணைந்து நடத்திய எதிர்ப்புப் போராட்டம் என்பவற்றைக் குறிப்பிடலாம்.
பொதுமக்கள் தாமாகவே முன்வந்து பிரித்தானிய தமிழர் பேரவையுடன் தொடர்புகொண்டு பேரூந்துகளை ஒழுங்கு செய்தமை, வீடு வீடாகச் சென்று தமிழ் மக்கள் மத்தியில் குறுகிய நேரத்தில் சிறு சிறு குழுவாகச் சென்று பரப்புரை மேற்கொண்டமை, குறுந்தகவல், மற்றும் மின்னஞ்சல் ஊடாக தமக்கிடையே மேற்கொண்ட பரப்புரை நடவடிக்கைகளை நாம் இங்கு சுட்டிக்காட்டுகின்றோம்.
தமிழ் மக்களின் இணைந்த முயற்சிக்கு அப்பால் சில சிங்கள தோழர்கள் உரிய நேரத்தில் முக்கிய போர்க்குற்ற சாட்சியங்களை எமக்கு தந்து உதவியதற்கும், அவற்றை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பவும், பத்திரிகைகளில் வெளியிடவும் குறுகிய காலத்தில் மேற்குலக ஊடகங்கள் இணங்கியதற்கும் நாம் நன்றி தெரிவிக்கின்றோம்.
அத்துடன், பிரித்தானியா அரசாங்கம், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் எம்மால் கொடுக்கப்பட்ட அழுத்தங்கள் என்பனவும் இதற்கு வலுச்சேர்த்துள்ளன.
இதேவேளை, பிரித்தானிய தமிழர் பேரவையின் சட்ட வல்லுனர்கள் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி வருவதுடன், தமிழினப் படுகொலை புரிந்து, போர்க் குற்றம் செய்தவர்களிற்கு எதிரான சட்ட ரீதியான நடவடிக்கைகள் பற்றி தொடர்ச்சியாக ஆராய்ந்து வருகின்றனர். போர்க் குற்றம் புரிந்தவர்கள் தொடர்பான மேலதிக விபரங்களும், ஆதாரமான சாட்சியங்களும் பொதுமக்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம்.
தமிழ் மக்களின் ஒற்றுமையால் ஏற்பட்ட இந்த முடிவை, எமது வெற்றிக்கான முதற்படியாகக் கொண்டு, தமிழ் மக்கள் மேலும் உற்சாகத்துடனும், நம்பிக்கையுடனும், ஒற்றுமையுடனும் எமது செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என பிரித்தானிய தமிழர் பேரவை தங்களை உரிமையுடன் கேட்டுக்கொள்ளுகின்றது.
நாளை (வியாழக்கிழமை) ஒக்ஸ்போர்டில் நடைபெற இருந்த எமது எமது போராட்டம் லண்டனில் மகிந்த தங்கியுள்ள விடுதிக்கு இடமாற்றம் செய்யப்படுள்ளது. புதிய இடத்திற்கான அனுமதி கேட்டவுடனேயே பிரித்தானிய காவல்துறையினர் வழங்கியதற்கும் பிரித்தானிய தமிழர் பேரவை நன்றி தெரிவிக்கின்றது.
எனவே, லண்டன், பார்க் லேனில் அமைந்துள்ள டோசெஸ்ரெர் விடுதியில் (Dorchester Hotel, 53 PARK LANE, LONDON, W1A 2HJ) மகிந்தவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை மாலை 4:00 மணியில் இருந்து இரவு 7:00 மணிவரை போராட்டம் நடைபெறும் எனவும், இதில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கலந்துகொள்ள வேண்டும் எனவும், பிரித்தானிய தமிழர் பேரவை கேட்டுக் கொள்ளுகின்றது.
போர்க்குற்றம் புரிந்தவர்களிற்கு எதிராக மக்கள் அதிகளவில் திரண்டு தமது எதிர்ப்பை வெளியிடுவதும், அவர்களிற்குரிய தண்டனையைப் பெற்றுக்கொடுக்க பாடுபடுவதும் தமிழ் மக்களின் கடமையாகும்.
மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக பிரித்தானியாவில் நடைபெறும் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் ஏனைய நாடுகளிலுள்ள மக்களும் பல செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.
கனடாவில் பிரித்தானியத் தூதரகத்திற்கு முன்பாக கனடிய தமிழ் மக்கள் நாளை ஒன்றுகூடி தமது ஆதரவை வெளிப்படுத்த இருக்கும் அதேவேளை, பிரான்சில் இருந்து பேரூந்துகளில் பிரித்தானியா வரும் மக்கள் இங்குள்ள போராட்டங்களில் தம்மை இணைத்துக்கொள்ள இருக்கின்றனர்.