Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

போராட்டம் அல்லது சரணடைவு இடையில் வேண்டாம் வாழ்வு : ச. நித்தியானந்தன்

KFC-at-Cargills-Square-in-Jaffna

முடிந்து போயின

முப்பதாண்டு மேழித் தவமெல்லாம்
ஊழிற்காற்றில் அழிந்தே போனது
அறுவடை முடிந்தும் ஒரு மணியரிசிகூட மிஞ்சவில்லை
காவடி தூக்கிய தோள்கள் வலித்ததுதான் மிச்சம்
வரமேதும் வந்த வரலாறேதுமில்லை
மீண்டும் மீண்டும் ஆதிக்கக்கரங்களின் அடிமையானோம்
சாதிக்கமுடியா பொம்மைகளானோம்
நாடகம் முடிந்து வேஷம் கலைக்கையில்
ஒப்பனைகூட மிச்சமில்லை
வெறுமை மட்டும்தான் வேடத்திலிருந்தது
ஓவென்றழுதனர் சிலர்
மீளமுடியாமல் மூச்சடைத்தனர்
ஒற்றைக்குருவி தனிந்திருந்து தேம்புவது போன்று
ஆயிரமாயிரம் உயிரற்ற சடலங்களின் முன்னால்
உயிருள்ள சடலங்கள் அழுதன
தேம்பின
அரற்றின
எல்லோரும் பிணங்களாய்
எல்லோரும் ஊமையராய்
எல்லோரும் வலுவற்றவராய்
மரங்களாய் கிடந்தனர்
இந்திரபுரிகள் இடிந்துவிட்டனவே
கூத்துகள் குதூகலிப்புகள் தொலைந்துவிட்டனவே
கும்மாளங்கள் அழிந்துவிட்டனவே
மீண்டும் மீண்டும் சுற்றிச் சுற்றி
செக்குமாடுகளாய் வாயில் நுரைதள்ள
தொடங்கிய இடத்துக்கே வந்து சேர்ந்தோம்.
செத்தவனுக்கு சுண்ணமிடிக்க யாரும் இல்லை
கொல்பவனுக்கு குடை பிடித்தோர் பலரைப் பார்த்தோம்
காலங்கள் இறக்கை கட்டிக்கொண்டன
காவலரைத் தொலைத்த தேசம் காக்கிகளையும்
காடைகளையும் கண்டு நடுங்கத் தொடங்கியது
அவர்கள் பேசியதே வேதமானது
அவர்கள் எழுதியதே சட்டமானது
‘பாருக்குள்ளே நல்ல நாட்டில்’
(டீ)பார்கள் பெருகியது
பாலியல் சேட்டைகளும் பெருகியது
தரக்குறைவாய் போனது தந்தை மகள் உறவுகூட
சேடமிழுத்தவர் சிலர் சுதாகரித்தனர்
சுதாகரித்தவர் பலர் பிழைக்கக் கற்றுக்கொண்டனர்
அவர்கள்
தேசியம் பேசினர்
தன்னாட்சி என்றனர்
சுயநிர்ணயமே சுயமென்றனர்
கூட்டமைப்பே நாட்டுக்குயர்வென்றனர்.
நம்பிள்ளைகள் முன்மொழிந்த பெயரல்லவா
வீழ்ந்தவர்கள் பெயரால் கட்டப்பட்ட வீடல்லவா அது
தமிழரெல்லாம் வீட்டுக்குள் கால் வைத்தனர்
வர்ணம் பூசினர் ரைல்ஸ் பதித்தனர்
கொமட் வைத்து அழகுபார்த்தனர்
வீடு நமக்கானது
வீட்டுக்கு புதிதாய் விருந்தாளிகள் வரத்தொடங்கினர்
வீட்டுக்கு வேண்டாத விருந்தாளிகளும் உள்ளே நுழைந்தனர்
வீட்டில் பங்கும் கேட்டு எடுத்துக்கொண்டனர்.
அக்கினித் தீ பற்றியெரியும் போது
சுள்ளி முறித்துப் போட்டு ஊதி விடாதவர்கள் எல்லாம்
அன்னதானத்தில் தமக்கும் பங்கென்று தம்பட்டமடித்தனர்
தமிழன் மறதிக்காரன்தானே
தன்மானம் பேசியவர்கள் எல்லோரும் ‘தம்பி’யின்
வாரிசென்று தப்புக்கணக்குப் போட்டனர்.
வந்தாரையெல்லாம் வீடு வரவேற்றது
வாழ்வளித்தது
வரலாறு காணாத ஒன்றிணைவு
வென்றது வீடு
வெற்றி பெற்று தந்த ஆன்மாக்களை
குடிபுகுந்தார் மறந்தனர்
மறைக்கவும் பார்த்தனர்
தூசிக்கவும் தொடங்கினர்
மீண்டும் நாங்கள் இளிச்ச வாயர்களானோம்
வாசலில் வைத்த செடி பூமலரக் காத்திருந்தோம்
பூவும் மலரவில்லை
வேரும் தெரியவில்லை.
அவர்களுக்கென்னவோ
மூக்கில் வேர்த்தபடிதான் இருந்தது
எங்கேனும் கிளம்பிவிடுமொவென
உற்றுநோக்கினர்
முளைத்துவிடுமோ என
அவர்கள் அலைகிறார்கள்
அப்படித்தான் அரும்புகட்டிவிட்டாலும்;
உடனே மேய்ந்துவிடுகிறார்கள்.
சின்ன சுள்ளியெடுத்து கூடொன்று கட்டவிளைந்தால்
பருந்துகளுக்கு மூக்கில் வியர்த்துவிடும்
கூட்டைத் துவம்சம் செய்துவிடும்
எப்படித்தான் எழுவது
விழத்தெரிந்த எமக்கு எழத்தெரியாதது விந்தையன்றோ
தன்மானக் கூட்டமைப்பே
தமிழ்த்தேசிய அமைப்பே
விட்ட இடமும் விட்ட பிழைகளும் தெரிகிறதா
விழுந்த இடத்திலிருந்து தொடங்குங்கள் என்றுதான் ஆணையிட்டனர் மக்கள்
உலகம் வலியனின் கைகளில்தான் சுழல்கிறது
விடுதலைக்கு வேற்று வழி தேடுக
வலிமையோடு போராடுக
இது மக்கள் ஆணை
செயற்படுத்துங்கள்
வரலாறு உங்களை வரவேற்கும்
தூக்கி வைத்துக் கொண்டாடும்
ஆண்டு நூறின் பின்னர் கூட
தமிழன் வாய் உங்கள் நாமம் சூடும்
கூட்டமைப்பின் பழுத்த பழங்களே
உங்கள் அரசியல் வாழ்வு எங்கள் வயதைவிட அதிகம்
நாமுமக்கு சொல்ல வேண்டியதில்லை
ஒன்றில் எதிர்த்து போராடுங்கள்
அல்லது சரணடைந்துவிடுங்கள்
இரண்டுக்குமிடையில் நின்று நசிந்துவிடாதீர்கள்
– ச.நித்தியானந்தன் –

Exit mobile version