Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

“போராட்டத்தின் தேவையை ஏனைய இனங்கள் மத்தியில் கொண்டு செல்வதில் விடுதலை அமைப்புகள் தோல்வி’:எஸ். பாலகிருஷ்ணன்.

02.12.2008.

தமிழ்த் தேச விடுதலைப் போராட்டம் விடுதலை அமைப்புகளால் தமிழ் மக்கள் மத்தியில் முன் கொண்டு செல்லப்பட்ட அளவுக்கு அதன் அவசியத்தை ஏனைய இனங்களிடையே கொண்டு செல்வதில் விடுதலை அமைப்புகள் தோல்வி கண்டுள்ளதாக அரச மற்றும் சமூகக் கொள்கைகள் தொடர்பான ஆய்வாளரும் ஆலோசகருமான எஸ். பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

இலங்கையின் தேசிய இன முரண்பாடுகளும் சமாதான முன்னெடுப்புகளும் ஒரு வரலாற்றுப் பார்வை 19482007 ஆய்வு நூல் வெளியீட்டு விழா கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் விரிவுரை மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போது விழாவுக்கு தலைமை தாங்கி உரையாற்றும் போதே பாலகிருஷ்ணன் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தலைமையுரையாற்றிய எஸ்.பாலகிருஷ்ணன், இனப்பிரச்சினையின் பரிமாணங்களை எடுத்துக் கூறுவதில் இந்த நூலின் முக்கியத்துவம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்;

இந்த நூல் காலம் தாழ்த்தி வெளிவந்துள்ளபோதும் எமது தேச விடுதலைக்கான போராட்டத்தின் வரலாற்றுத் தேவையாக இந்நூல் வெளிவந்திருக்கிறது என்றே கூற வேண்டும்.

இனப்பிரச்சினையும் அதன் மூலமான முரண்பாடுகளும் விரிந்து செல்கின்ற அதன் தளத்துக்கு ஏற்ப, புதிய அரசியல் கட்டமைப்பு ஒன்றின் தேவையை இப்புத்தகம் வலியுறுத்தி நிற்கின்றது.

தேச விடுதலைப் போராட்டத்தின் போக்கில் அதன் முழுமையைப் புரிந்துகொண்டு விமர்சனம் செய்வது என்பது அவசியமான தேவையாக எப்போதுமே இருந்து வந்திருக்கிறது.

ஆனால், இனப்பிரச்சினையையும் விடுதலைப் போராட்டத்தின் போக்கையும் விமர்சித்தவர்கள், தமது இருப்புக்கு வசதியாக விமர்சனங்களை முன்வைத்தனர். இந்தப் போக்கு, தமக்கு வசதியான முறையில் போராட்டத்தின் போக்கை நகர்த்த முயற்சிப்பதில் போய் முடிந்திருக்கிறது. இது துரதிர்ஷ்டமான நிலைமை.

இந்தப் போராட்டம் நூறு வருடத்துக்கும் மேலான வரலாற்றைக் கொண்டிருக்கிறது. தென்னிலங்கை முற்போக்கு சக்திகள் மத்தியில் போராட்டத்தின் அவசியம் முன்கொண்டு செல்லப்பட்ட போதும், பின்னர் அவை பின்னடைவையே கண்டுள்ளன. ஏனைய இனமக்கள் மத்தியில் எமது போராட்டத்தின் அவசியத்தை மனப்பூர்வமாக ஏற்கச் செய்வதில் நாம் தோல்வியை கண்டுள்ளோம் என்றார்.

இதனையடுத்து, நூல் வெளியீடு இடம்பெற்றது.

நூல் வெளியீட்டைத் தொடர்ந்து, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் நூலுக்கான வெளியீட்டுரையை நிகழ்த்தினார்.

அதனையடுத்து, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் தனது கடந்தகால போராட்ட அனுபவங்கள் தொடர்பாக தனது மறக்கமுடியாத சம்பவங்களை நினைவுகூர்ந்தார்.

யாழ். பல்கலைக்கழக கலைப் பீடாதிபதி பேராசிரியர் என். பாலகிருஷ்ணனின் நூல் மதிப்பீட்டுரையைத் தொடர்ந்து, கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கந்தையா சர்வேஸ்வரனின் நன்றியுரையுடன் விழா நிறைவுபெற்றது.

Exit mobile version