அதற்குக் கட்டியம் கூறும் வகையில் பிப்ரவரி 26ல் தாய்த் தமிழகத்திலும், உலகெங்கிலும் நீதிக்கான போர் முழக்கத்தை எழுப்புவோம்.’ .இவ்வாறு வை.கோபாலசாமி தனது அறிக்கை ஒன்றை வெளியிட்டு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். முத்துக்குமார் மரணித்த போது தனது இறப்பைப் பயன்படுத்தி தமிழகத்தில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தி இனப்படுகொலையை நிறுத்துமாறு கடிதம் எழுதி வைத்துவிட்டு இறந்துபோனார். முத்துக்குமாரின் கனவைச் சிதைத்து அவரைச் சுடுக்காட்டுக்கு அனுப்பிவைத்தவர்களின் முக்கியமானவர்களுள் வை.கோ உம் ஒருவர். ஜெயலலிதாவும், பாரதீய ஜனதாவும் வெற்றிபெற்று புலிகளைக் காப்பாற்றும் என நம்பிக்கைகொடுத்து மக்களையும் புலிகளையும் வன்னிக்குள் முடக்கி அழிக்கத் துணைபோனவர் வை.கோ. அழிப்பு நடந்த பின்னரும் பிரபாகரன் மரணிக்கவில்லை என பொய்யை அவிழ்த்துவிட்டு எழுச்சிகள் ஏற்படாமல் பார்த்துக்கொண்டவர்களுள் முக்கியமானவர் வை.கோ ஒருவர்.
இன்றுவரைக்கும் ஈழத்தில் மக்கள் மத்தியிலிருந்து போராட்டங்கள் எழாமல் பிரபாகரன் வந்துவிடுவார் என தடுத்து அதிகாரவர்க்கத்தின் அழிப்பிற்குத் துணைசெல்பவரும் வை.கோபாலசாமியே.இறுதியில் இந்தியாவின் ராஜபக்சவான நரேந்திர மோடியிடம் சரணடைந்த வை.கோ இப்போது போராட்டத்திற்கு அழைப்புவிடுக்கிறார்.
அவர் தனது அறிக்கையில் சென்னையிலும், மாவட்ட தலைநகரங்களிலும், பிற இடங்களிலும் பிப்ரவரி 26 புதன்கிழமை காலை 11 மணிக்கு சாதி, மதம், கட்சி எல்லைகள் கடந்து நீதி கேட்கும் பட்டயங்கள் ஏந்தி ஆர்ப்பரித்து முழக்கமிட அழைக்கிறேன் என்கிறார்.