தமிழ் நாட்டிலும், தமிழ்ப் பிரதேசங்களிலும், சிங்கள மக்கள் மத்தியிலும் சுய நிர்ணய உரிமைக்கான கோரிக்கைக்கு ஆதரவான புதிய எழுச்சிகளும் கருத்துக்களும் உருவான நிலையில் விக்னேஸ்வரன் தாடியும் பொட்டுமான களத்தில் இறங்கினார். இதுவரை மக்களைப் பார்வையாளர்களாக ஒதுக்கிவிட்டு நாங்களும் அமரிக்கா அல்லது இந்தியாவும் சேர்ந்து உங்களைக் கரை சேர்க்கிறோம் என்று மக்களை அழித்து சுடுகாட்டில் புதைத்துவிட்டு இன்று சாமியார் வேடத்தில் நான் சட்டவழிகளில் பார்த்துகொள்கிறேன் என விக்னேஸ்வரனைக் களத்தில் இறக்கியுள்ளனர்.
மக்களின் கோபத்தையும் போர்க்குணத்தையும் தணிக்கும் மேட்டுக்குடி விக்னேஸ்வரன் போன்றவர்கள் தேசிய இன ஒடுக்குமுறையின் கோரத்தை இதுவரை சந்தித்ததில்லை. வன்னிப் படுகொலைகளைப் பற்றி மூச்சுக்கூட விட்டதில்லை. வன்னியில் அழிப்பு நடந்தபின்னரே தமிழ்த் தலைமைகள் பேசக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளதென வன்னிப் படுகொலைகளை நியாயப்படுத்தும் இலங்கை, இந்திய, ஏகாதிபத்தியங்களின் அடியாள் விக்னேஸ்வரன் என்பதை ராஜபக்ச அரசின் மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ன வேறு மறைமுகமாகச் சொல்லிவைத்துள்ளார்.
சி.வி. விக்னேஸ்வரனின் வரலாறு, குடும்பப் பின்னணி மற்றும் கல்விப் பின்னணி ஆகியவற்றைப் பார்க்கும் போது அவர் ஒருபோதும் இனவாதத்துக்கு அடிபணியமாட்டார் என்பது தெளிவாகின்றது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த விடயம் குறித்து அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,
‘ஓய்வுபெற்ற முன்னாள் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் வட மாகாண சபையின் முதலமைச்சராக வருவதன் மூலம் ஒருபோதும் நாடு பிளவுபட மாட்டாது. தமிழ் மக்களின் கோணத்திலிருந்து பார்க்கும் போது அவர் ஒரு மத்தியஸ்தமான மனிதராக இருக்கின்றார்.
அவரின் நேர்காணல்களை நான் அண்மையில் வாசித்துப் பார்த்தேன். தமிழ் மக்களின் ஜீவனோபாய மற்றும் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பதே அவரின் நோக்கமாகும். மாறாக அரசியல் போராட்டத்தை கட்சி முன்னெடுக்கும் என்பதே அவரின் நிலைப்பாடாக உள்ளது.
சி.வி. விக்னேஸ்வரன் கொழும்பில் பிறந்து வளர்ந்தவர். சிங்கள சமூகத்துடன் ஈடுபாட்டுடன் செயற்படுகின்றார். அவரின் குடும்பமும் சிங்கள மக்களுடன் உறவு வைத்துள்ளது.
அந்த வகையில் விக்னேஸ்வரனின் வரலாறு குடும்ப பின்னணி மற்றும் படிப்பு ஆகியவற்றை பார்க்கும் போது அவர்
ஒருபோதும் இனவாதத்துக்கு அடிபணிய மாட்டார் என்பது தெளிவாகின்றது.
அதனால் அவரின் வருகையினால் நாட்டுக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்று தென்னிலங்கையில் எவரும் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை.
அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டே மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்று விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் இணைந்து செயற்பட அவர் எந்தளவு தூரம் ஆர்வமாக இருக்கின்றார் என்பதும் தெளிவாகின்றது என்றார்.’
புலி எதிர்ப்புக் கும்பல்களுக்கோ அன்றி முன்னை நாள் புலி ஆதரவாளர்களுக்கோ சிங்கள மக்கள் என்றால் அது ஒடுக்கும் சிங்கள அதிகாரவர்க்கம் என்பதே அர்த்தப்படும். இலங்கையில் மீது திணிக்கப்படும் பொருளாதாரச் சுரண்டலால் நாளாந்தம் தற்கொலை செய்துகொள்ளும், ராஜப்கச பாசிசத்தால் அழிக்கப்படும் சிங்கள மக்கள் இவர்களுக்கு தெரிவதில்லை. ஆக, விக்னேஸ்வரன் ராஜபக்ச பாசிசத்தோடு பெரும்பகுதியான புலம்பெயர் கனவான்களை இணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.