போபால் மக்கள் வரிப்பணத்தில் நஷ்ட ஈடா?- தா.பாண்டியன் கண்டனம்.
இனியொரு...
போபால் விஷவாய்வுக் கசிவில் கொல்லப்பட்டவர்களுக்கு இந்திய மக்களின் வரிப்பணத்திலிருந்து பத்து லட்சம் பணம் கொடுப்பதாக முடிவெடுத்திருக்கிறது. இது தொடர்பாக தா.பாண்டியன் திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: போபால் விஷவாயு கசிவு சம்பவம் நடந்து 26 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 5,600 பேர் என அமைச்சர்கள் குழு தெரிவித்துள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரம் பேர் என மருத்துவமனை மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றமும் அதை பதிவு செய்துள்ளது. எனவே, உண்மையை மறைத்து அரசு பொய் சொல்கிறது. ஆண்டர்சனை இந்தியாவுக்கு கொண்டுவர சட்ட ஆலோசனை கேட்கப்படும் எனக் கூறுவது வெட்கக்கேடு. அவரை அப்போது தப்பவிட்டவர் அன்ஜூன்சிங் என்பது அம்பலமாகியுள்ளது. எனவே, குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் அனைவர் மீதும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1,300 கோடி இழப்பீடு வழங்க அமைச்சர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது. தவறு செய்தவர்களுக்கு அபராதம் விதிக்காமல் இந்திய மக்களின் வரிப்பணத்தை எடுத்து இந்திய மக்களுக்கே இழப்பீடாக கொடுப்பது தேசத் துரோகம். அமெரிக்க நாட்டுக்கு அருகே அட்லாண்டிக் கடலில் கப்பல் உடைந்து எண்ணைய் பரவியதால் ஏற்பட்ட பாதிப்புக்கு இழப்பீடாக ரூ.4 லட்சத்து 15 ஆயிரம் கோடி இழப்பீடு வழங்க கப்பல் நிறுவனத்திற்கு அந்நாட்டு அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார். அதை கப்பல் நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதை இந்திய அரசு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இந்தச் சூழ்நிலையில் அணுசக்தி இழப்பீடு மசோதாவில் அமெரிக்க நாட்டுக்கு மட்டும் சலுகை காட்டாமல் ரஷியா, கனடா ஆகிய நாடுகளில் இருந்தும் அணுசக்தி கருவிகள் இறக்குமதி செய்யப்படுவதால் அனைவரையும் கட்டுப்படுத்தும் வகையில் ஒரே முறையில் இருக்குமாறு மசோதாவை திருத்த வேண்டும். விலைவாசி உயர்வு: நாட்டின் வரவு-செலவு திட்டம் மற்றும் ரிசர்வ் வங்கியின் வரவு-செலவு கணக்கு ஆகிய இரண்டின் மொத்த தொகை சுமார் ரூ.41 லட்சத்து 50 ஆயிரம் கோடி ஆகும். அதைவிட நான்கு மடங்கு பணம் எந்தவித கணக்கிலும் வராமல் நாட்டில் புழக்கத்தில் உள்ளது. இந்த தொகை மூலம்தான் சூதாட்ட வணிகமும், முன்பேர வர்த்தகமும், பங்குசந்தையும் பெருமளவில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதனால்தான் விலைவாசியும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதைக் கட்டுப்படுத்தவில்லை என்றால் விலைவாசி குறையாது. மத்திய அரசில் இரண்டு அமைச்சர்களைத் தவிர எஞ்சிய அனைவரின் குடும்பத்தாரும், உறவினர்களும் ஏதேனும் தொழில் செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களை அரசால் கட்டுப்படுத்த இயலவில்லை. நாட்டில் இருந்து பெருமளவு பணம் வெளிநாடுகளுக்கு எவ்வித அனுமதியும் இல்லாமல் கொண்டு செல்லப்படுகிறது. இதைத் தடுக்க வழியில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது அரசின் எண்ணெய் நிறுவனங்களைக் காப்பற்ற எனக் கூறுவது பொய். அம்பானி சகோதர்களை திருப்தி செய்யவே விலை உயர்வு அறிவிக்கப்படுகிறது. செம்மொழி மாநாடு: ஏழைகள் நிறைந்த நாட்டில் ரூ.450 கோடியை செலவு செய்து செம்மொழி மாநாடு நடத்துகின்றனர். திருவள்ளுவர் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகியும் இதுவரையில் அதற்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீகாரம் பெறப்படவில்லை. தமிழ்ப் புலவர் பட்டம் பெற்ற சுமார் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படவில்லை. நர்சரி பள்ளிகளின் வளாகத்தில் தமிழ் பேசினால் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தப்படுவது வேதனை அளிக்கிறது. கலைஞர் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் 200 சதுர அடியில் மட்டுமே வீடு கட்டிக் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அது போதுமானதாக இருக்காது. எனவே, அந்தத் திட்டத்தின் விதிமுறைகளை முழுமையாக மாற்ற வேண்டும். திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தபடி குடிசையில் வாழ்வோருக்கு கிராமப்புறங்களில் 5 சென்ட் வீட்டுமனையும், நகர்ப்புறங்களில் 3 சென்ட் நிலமும் வழங்க வேண்டும். உழுவோருக்கே நிலத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் மாதத்தில் போராட்டம் நடத்தப்பட உள்ளது. போராட்ட வடிவம் குறித்து ஆகஸ்ட் 9-ல் அறிவிக்கப்படும் என்றார் தா.பாண்டியன்.