Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

போபால்: ஆன்டர்சன் தப்பியது ராஜீவ் காந்திக்கு தெரியும்!

போபால் விஷவாயு வழக்கின் முக்கிய குற்றவாளியான வாரன் ஆன்டர்சனை தப்பவிட்டது காங்கிரஸ் அரசே என்பது அம்பலமாகியுள்ள நிலையில், அதை மறைப்பதற்காக காங்கிரஸ் மேலிடம் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. குற்றம் சாட்டுபவர்கள் மீது பாய்ந்து காங்கிரஸ் மேலிடம் வெறுப்பை உமிழ்ந்து வருகிறது.

போபால் விஷவாயுக் கசிவு விபத்து நடந்த 1984 டிசம்பர் 2-3க்குப் பின்னர் மூன்று நாட்கள் கழித்து யூனியன் கார்பைடு நிறுவனத் தலைவர் வாரன் ஆன்டர்சன் மீது இபி கோவின்படி கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யாமல் சாதாரண பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அப்போது மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது.

கைவிடப்பட்ட பிரிவு

அப்போதைய ஹனுமான் கஞ்ச் காவல் நிலைய பொறுப்பாளர் சுரேந்தர் சின்ஹா, நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களின்படி முதலில் வாரன் ஆண்டர்சன் கைது செய்யப்பட்டார். பின்னர் 1984, டிசம்பர்7ம் தேதி காலை 10.10 மணிக்கு மேற்படி நிறுவனத்தின் நிர்வாகிகள் கேசுப் மஹிந்திரா, விஜய் பிரகாஷ் கோகலே மற்றும் பல உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது இபிகோ பிரிவு 304-ஏ (கொலை அல்லாமல் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்துதல்) பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர்கள் மீது அலட்சியத்தால் மரணம் ஏற்படுத்துதல் (278) , உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் ஆபத்தான சூழலை உருவாக்குதல் (284), தவறான நடத்தை (426), தவறான நடத்தையால் கால்நடைகள் மற்றும் விலங்குகளின் உயிருக்கு ஆபத்து விளைவித்தல் மற்றும் ஊனமாக்குதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பின்னர், 304 வது பிரிவு நீக்கப்பட்டது. ஆனால் அப் பிரிவுகளை நீக்குவதற்கு காவல் துறைக்கு அதிகாரமில்லை என்று சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள். அப்பிரிவுகளை நீக்காமல் விட்டிருந்தால் வாரன் ஆண்டர்சனால் தப்பியிருக்க இயலாது. பின்னர் கேசுப் மஹிந்திரா மற்றும் விஜய் பிரகாஷ் கோகலே மீது சிபிஐ 304வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தது. இதனால் இருவருக்கும் 10 வருட கால சிறைத்தண்டனை கிடைத்திருக்கும். ஆனால் உச்சநீதிமன்றம் அப்பிரிவுகளைக் கைவிட்டு விட்டது.

`அது அரசின் முடிவு’

1984ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2-3 தேதிகளில் மீத்தைல் ஐஸோ சயனேட் என்ற உயிர்க்கொல்லி விஷ வாயுவினால் சுமார் 25 ஆயிரம் மனித உயிர்கள் பலியாகின. ஆயிரக் கணக்கான மக்கள் உடல் ஊனமுற்றனர். உயிர் பிழைத்த மக்கள் செத்தவர்களைக் கண்டு பொறாமைப்பட்ட கொடிய காலம் அது. ஆனால் இன்று காங்கிரஸ் சொல்கிறது, “ஆண்டர்சன் மற்றும் இதரர் மீதான கடுமையான பிரிவை நீக்கியது, அரசு எடுத்த முடிவு; கட்சியின் முடிவல்ல”.

ராஜீவ் காந்தி?

அரசு முடிவுக்கும் ஆளுங் கட்சியின் முடிவுக்கும் என்ன வித்தியாசம் என்று மக்கள் காங்கிரசிடம் விளக்கத்தை எதிர்பார்க்கிறார்கள். இன்று கட்சியைக் காப்பாற்ற பிரதமர் மன்மோகன் சிங், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியாகாந்தி, மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, சோனியா காந்தியின் அரசியல் செயலாளர் அஹமது பட்டேல், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் ஏ.கே. அந்தோணி அனைவரும் சேர்ந்து “அரசு என்பது வேறு, கட்சி என்பது வேறு” என்று கதைகட்டுகிறார்கள். கொடிய குற்றவாளிகள் தப்பிவிட்டார் களே என்று தேசமே துடிக்கும் போது, காங்கிரஸின் கவ லையே வேறாக இருக்கிறது. இந்தப் பிரச்சனையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயர் கெட்டுவிடக் கூடாது என்பதே அது.

முன்னாள் முதல்வர் அர் ஜூன் சிங் தற்போது ஓரங்கட்டப்பட்டுள்ளதால் போபால் விஷவாயு பற்றியும், யூனியன் கார்பைடு தலைவர் வாரன் ஆண்டர்சன் தப்பியவிதம் பற்றியும் அவர் ஏதாவது உளறிக் கொட்டி விடக்கூடாதென்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வெள்ளியன்று பேசுகையில், “ராஜீவ் காந்தி அரசைக் குறிப்பிட்டு எதையும் கேட்கக் கூடாது’’ என வாய்ப் பூட்டு போட முயற்சித்தார்.

ஏற்கெனவே அமைக்கப் பட்ட அமைச்சர்கள் குழு என்னவானது என்று தெரி யாத நிலையில், இன்னொரு மத்திய அமைச்சர்கள் குழு அமைத்துள்ளார்கள். இந்தி யாவில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ள யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தற்போதைய உரிமையாளரான டவ் கெமிக்கல்ஸைப் பாதுகாக்கும் விதமாகவே இந்த புதிய குழுவின் தலைவரான ப.சிதம்பரம் மற்றும் கமல் நாத் போன்றவர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.

அலெக்சாண்டர் மீது பாய்ச்சல்

இந்நிலையில் வாரன் ஆண்டர்சனை விடுவிக்க ராஜீவ் காந்தி உத்தரவிட்டிருக் கலாம் என்று ராஜீவ் காந்தியிடம் முதன்மை செயலாளராக பணிபுரிந்த பி.சி. அலெக்சாண்டர் கருத்து தெரிவித்துள்ளார்.

இக்கருத்து காங்கிரஸ் தலைவர்களிடம் பெருத்த ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக அறிவிக்கப் பட்ட பி.சி.அலெக்சாண்டரை காங்கிரஸ் ஆதரிக்க வில்லை.

எனவே ராஜீவ் காந்தியைப் பற்றியும்,காங்கிரஸ் கட்சி யைப் பற்றியும் காழ்ப்புணர்ச்சியால் அப்படிக் கூறுகிறார் என்று காங்கிரஸ் மேலிடம் “பதிலடி” கொடுத்துள்ளது.

ராஜீவ் காந்தியைப் பாதுகாக்கும் விதமாக தவாண், “ராஜீவ் காந்தி அப்படிக் கூறி யிருக்க மாட்டார்” என்று கூறி முன்னாள் முதல்வர் அர்ஜூன் சிங் மீது பழியைத் தூக்கிப் போடுகிறார். இந்நிலையில் நிலைமையைச் சமாளிக்கும் விதமாக காங்கிரஸ் பொதுச் செயலாளர்களுள் ஒருவரான திக்விஜய் சிங் “அமெரிக்க நிர்ப்பந்தம் காரணமாக” என்று புதிய விளக்கம் கொடுக்கிறார்.

 Thanks: Theekkathir.

Exit mobile version