உலகப் பொருளாதாரச் சுரண்டல் அமரிக்காவின் உள்ளேயும் அரசியல் சமூகக் கட்டமைப்பில் மாற்றங்களையும் ஒடுக்குமுறைகளையும் அதிகரித்துவருகிறது. இதுவரைகும் மக்களின் வரிப்பணத்திலிருந்தும், மூன்றாம் உலக நாடுகளில் சுரண்டும் பணத்திலிருந்தும் அமரிக்க ஐரோப்பிய நாடுகளில் வீட்டு வாடகை மானியம், வேலையற்றோருக்கான உதவித் தொகை போன்ற திட்டங்களை அரசுகள் செயற்படுத்தி வந்தன. உற்பத்தியற்ற சேவைத் துறையையும் நிதி மூலதனத்தையும் கொண்ட பொருளாதார அமைப்பு ஐரோப்பிய அமரிக்க நாடுகளில் செயற்படுத்தப்பட்டன. இன்று உற்பத்தியை உலக அரங்கிலிருந்து உள்ளூர் மயப்படுத்த அரசுகள் முற்படுகின்றன. உள்ளூரிலேயே மலிவான கூலிக்கு வேலை பார்க்கும் தொழிலாளர்களை உற்பத்தி செய்ய முனையும் அரசுகள் மானியங்களை நீக்கி மக்களின் வாழ்க்கைத் தரத்தை கேள்விக்குள்ளாக்க முற்படுகின்றன.
இதன்போது பல போராட்டங்களையும் அதிகாரவர்க்கத்தின் நிலைகுலைவையும் சந்திக்க நேரிடும் என ஆளும்வர்க்கம் அஞ்சுகின்றது. இவ்வாறான நிலைமைகளை எதிர்கொள்வதற்காகப் பல்வேறு வழிமுறைகள் கையாளப்படுகின்றன. அதன் ஒரு பகுதியே இவ்வாறான தாக்குதல்களை அரசுகள் திட்டமிட்டு நடத்துவதும் என கருத்து நிலவுகின்றது.
பொஸ்டன் தாக்குதலில் கைதான சந்தேக நபர் குறித்த விவரணப்படம் ஒன்று USA Today தொலைக்காட்சியில் வெளியாகியிருந்தது. USA Today தொலைக்காட்சி சந்தேக நபரின் சக மாணவர் ஒருவரின் தொலைபேசி நேர்காணலை வெளியிட்டுள்ளது.