25.11.2008.
ஜூரிச்: தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி மிகப் பெரிய ஒன்றல்ல. இதை விட மோசமான நிலை இனிமேல்தான் வரும் என்று சர்வதேச நிதியமான ஐ.எம்.எஃப்பின் தலைமைப் பொருளாதார நிபுணர் ஆலிவர் பிளன்சார்ட் கூறியுள்ளார்.
மேலும், பொருளாதார நெருக்கடி இன்னும் மோசமாகும்.
தற்போது உள்ளதை விட மோசமான நிலை ஏற்படும். 2010ம் ஆண்டுக்குப் பிறகுதான் நிலைமை படிப்படியாக சரியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜூரிச்சைச் சேர்ந்த செய்தித்தாள் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ஒவ்வொரு பொருளாதார பிரச்சினைக்கும் பணம் கொடுத்து சரிக்கட்டும் அளவுக்கு ஐ.எம்.எஃப்பிடம் பணம் இல்லை என்பதை அனைவரும் முதலில் உணர வேண்டும்.
இப்போது உள்ள உலகப் பொருளாதார நெருக்கடி மிகப் பெரியதல்லை. நிலைமை இன்னும் மோசமாகவில்லை. அந்தக் கட்டம் இனிமேல்தான் வரப் போகிறது.
சகஜ நிலை திரும்ப நிறைய அவகாசம் தேவைப்படும். 2010ம் ஆண்டுக்குப் பிறகுதான் நிலைமை சரியாகும். அதன் பிறகு பொருளாதார வளர்ச்சி மீண்டும் உத்வேகம் பெறும். 2011ம் ஆண்டு நிலைமை நல்ல சூழ்நிலைக்கு மாறி விடும் என்றார் பிளன்சார்ட்.
பொருளாதார நெருக்கடியால் தத்தளித்துக் கொண்டிருக்கும் உக்ரைன், செர்பியா, பாகிஸ்தான், ஹங்கேரி, ஐஸ்லாந்து ஆகிய நாடுகளுக்கு சமீபத்தில் ஐ.எம்.எஃப் நிதியுதவி அளித்தது. அதேபோல லாத்வியாவுக்கும் அது நிதியுதவி அளிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.