26.10.2008.
அமெரிக்காவின் தவறான கொள்கைகளால் ஏற்பட்டிருக்கும் சர்வதேச பொருளாதார நெருக்கடியால் வேலையில்லாதோரின் எண்ணிக்கை உலக அளவில் 21 கோடியை எட்டும் என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு(ஐ.எல்.ஓ) எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்த மோசமான நிலைமை உருவாகும் என்று கூறியுள்ள அந்த அமைப்பு, இதில் தற்போது வேலையிழந்துள்ள மற்றும் அடுத்து வேலையிழக்கப்போகும் 2 கோடிப் பேரையும் உள்ளடக்கியதாகும்.
முதன்முறையாக இந்த வேலையில்லாதோரின் எண்ணிக்கை 20 கோடியைத் தாண்டப் போகிறது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியவர்களை காப்பாற்றும் முயற்சிகளில் அரசுகள் இறங்கும்போது நிதி நிறுவனங்களைப் பற்றி மட்டுமே கவலைப்படாமல் மக்களைப் பற்றியும் கவலைப்பட வேண்டும் என்று ஐஎல்ஓ தலைவர் ஜுவான் சோமாவியா வலியுறுத்தியுள்ளார். வெறும் லாபம் மற்றும் நஷ்டம் ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே இந்தப் பிரச்சனையை அணுகுவது சரியாக இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
நெருக்கடியால் மக்கள் கடும் துயரைச் சந்தித்து வருகிறார்கள். இந்த நிலையில் வேலைவாய்ப்பின்மையை சமாளிக்க நிவாரணம் மற்றும் சமூகப்பாதுகாப்பு அளிக்க வேண்டும். நம்மிடம் போதுமான நிதி ஆதாரங்கள் இருந்தால் இப்படிப் பேசிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. மக்களின் நலனைப் பேணுவதற்கு போதிய நிதி இல்லை. அதைத் திரட்ட அனைத்து நாடுகளும் முயற்சிக்க வேண்டும் என்று ஐ.எல்.ஓ கூறுகிறது.
ஓய்வூதியர்களின் கணக்கில் பணம் போடப்படுமா என்ற அச்சத்தில் ஏராளமான அமெரிக்கர்கள் பதறிப்போய் உள்ளார்கள். பங்குச்சந்தையில் போடப்பட்ட அமெரிக்கர்களின் ஓய்வூதிய நிதி பறிபோயுள்ளது. இந்தியாவில் பங்குச்சந்தைக்கு ஓய்வூதிய நிதியைக் கொண்டு போக வேண்டும் என்று சீர்திருத்தவாதிகள் முழங்கி வரும் வேளையில் அதன் ஆபத்தை அமெரிக்க அனுபவம் சுட்டிக்காட்டியுள்ளது. நிதி நெருக்கடிக்கு சுமார் 30 லட்சம் கோடி ரூபாயைக் கேட்டு வாங்கியிருக்கும் அமெரிக்க அரசு அந்தப் பணத்தை ஓய்வூதிய நிதிக்கும் அளிக்க வேண்டும் என்று ஐ.எல்.ஓ. கேட்டுக் கொண்டுள்ளது.
பெரு நிறுவனங்களை மட்டுமே கவனத்தில் கொண்டு இயங்கும் அணுகுமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கூறும் சோமாவியா, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு சிறு தொழில்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்கிறார். வேலை வாய்ப்பு குறித்து உலகம் முழுவதும் மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள் என்று கூறும் அவர், பல நாடுகளின் வளர்ச்சியில் பெரும் பாதிப்பு ஏற்படப்போகிறது என்பதுதான் இதற்குக்காரணம் என்று குறிப்பிடுகிறார்.
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பூஜ்யமாகவே இருக்கப் போகிறது. ஐப்பானின் வளர்ச்சி வெறும் 0.5 சதவீதமாகத்தான் இருக்கும் என்று சர்வதேச நிதியம்(ஐ.எம்.எப்) கணித்துள்ளது. இதன் அடிப்படையிலேயே வேலைவாய்ப்பின்மை குறித்த எச்சரிக்கையை ஐ.எல்.ஓ வெளியிட்டுள்ளது.