தமிழ் மக்கள் மீதான பேரினவாத இலங்கை அரசின் போரை ஒரு இராணுவத் தளபதியாக நின்று முன்னெடுத்தவர் பொன்சேகா. தடை செய்யபப்ட்ட குண்டுகளை தமிழ் மக்கள் மீது ஏவி சிறுபான்மை மக்களைக் கொன்றொழித்த போர்க்குற்றவாளி பொன்சேகாவுக்கும் போர்க்குற்றங்களின் தலைமைத் தளபதி ராஜபட்சேவுக்குமிடையில் ஏற்பட்ட அதிகாரப் போட்டியில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார் பொன்சேகா. ராணுவ பதவியில் இருந்தபோதே அரசியலில் ஈடுபட்டதாகவும், ராணுவ ரகசியங்களை வெளியிட்டதாகவும் புகார் கூறப்பட்டு, இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டார். கடந்த பிப்ரவரி மாதம் முதல் அவர் ராணுவ காவலில் சிறையில் உள்ளார். பொன்சேகா மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்த ராணுவ நீதிமன்றம், அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறியுள்ளது.இந்நிலையில், பொன்சேகாவிற்கு எதிராக விதித்துள்ள தீர்ப்பு தொடர்பாக கருத்துக்களை வெளியிட ஊடகங்கள் அஞ்சுவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.மேலும் அவர் கூறியுள்ளதாவது, பொன்சேகாவிற்கு எதிரான தீர்ப்பு தொடர்பாக கருத்துக்களை வெளியிட பலரும் அஞ்சுகின்றனர். இந்த விஷயம் குறித்து சபாநாயகரிடம் முறையிட செய்ய உள்ளேன். பொன்சேகாவிற்கு எதிராக விதிக்கப்பட்ட தீர்ப்பு சட்டத்திற்கும், நாடாளுமன்ற சிறப்புரிமைகளுக்கும் புறம்பானது.தற்போதைய ராணுவத் தளபதியினால், முன்னாள் ராணுவத் தளபதி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை. கொலையாளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படும் இந்த நாட்டில் பொன்சேகாவின் நிலைமை கவலைக்குரியது என்றார்.