இதே போல இரு தினங்களுக்கு முன்னர் பொத்துவில் பிரதேசத்தில் இவ்வாறான மர்ம மனிதர்களைக் கண்டு, பொதுமக்கள் துரத்திச் சென்ற போது அவர்கள் பாழடைந்த வீடொன்றுக்குள் சென்று மறைந்தனர். எனினும் மர்ம மனிதர்கள் வசம் துப்பாக்கி காணப்பட்டதால் பிரதேச மக்கள் அவர்களை நெருங்கவில்லை. இதனையடுத்து அங்கு ஒளிந்திருந்த மர்மமனிதர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். பின்னர் குறித்த பாழடைந்த வீட்டினுள் சென்ற பிரதேசமக்கள் அங்கு பொலிஸாரின் சீருடைகள், தொப்பிகள், காலணிகள், அடையாள அட்டையின் பிரதிகள், மற்றும் பாஸ்போர்ட் பிரதிகள், ஆடைகள், தேர்தல் இடாப்பு கோப்பு, கத்தி முதலான பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.
இந் நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் பொத்துவில் பிரதேசத்தில் பெண்ணொருவரை வன்முறைக்குட்படுத்த முயன்ற மூன்று இராணுவத்தினரை பொதுமக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்ததைத் தொடர்ந்து அப் பிரதேசத்தில் நிலைமை மிகவும் பரபரப்பாக உள்ளது. பாதுகாவல் படையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான கலவரத்தின் போது ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
பொதுமக்களினால் பிடிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்ட சந்தேக நபர்களான இராணுவத்தினரை பொலிஸார் விடுதலை செய்தமையே இக் கலவரத்துக்குக் காரணமாக அமைந்துள்ளது. விடுவிக்கப்பட்ட அம் மூவரும் இன்னும் சில இராணுவத்தினருடன் பொத்துவில் பிரதேசத்துக்குச் சென்று பொதுமக்களை மிகவும் மோசமாகத் தாக்கியுள்ளனர். அதில் படுகாயமுற்ற நால்வர் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அந் நால்வரையும் விடுதலை செய்யும்படி கோரி நேற்று பொத்துவிலில் ஹர்த்தாலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பொலிஸாரினால் முடியாமல் போனதோடு இராணுவத்தினரும் களத்தில் இறங்கினர். இராணுவத்தினர் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியதில் ஏ.எம்.மஹ்ஜூன் எனும் இளைஞர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளார்.
தற்போது அப் பிரதேசத்தில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளதோடு, மேலும் மேலும் பொலிஸாரும் இராணுவத்தினரும் அப் பிரதேசத்துக்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.