இலங்கைப் பங்கு சந்தையில் முக்கிய நிறுவனமும், இந்திய முதலீட்டாளர்களான பாலாஜி ஷிப்பிங் இன் முக்கிய பங்குதாரர்களுமான ஹேலிஸ் குரூப் கம்பனிக்காக இலங்கை இராணுவம் ஒருவரைச் சுட்டுக்கொன்றுளது. பதினைந்து பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள வெலிவேரிய பிரதேசத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் மகிந்த அரசின் பாசிச இராணுவம் தாறுமாறாகச் சுட்டதில் ஒருவர் இறந்துள்ளார் மற்றும் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்ற தகவலை இராணுவப் பேச்சாளரே தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் இராணுவத்தின் தகவல்கள் மட்டுமே வெளியாகியுள்ளன.
கையுறைகள் மற்றும் ரப்பர் பொருட்களைத் தயாரிக்கும் இந்த நிறுவனத்திலிருந்து வெளியாகும் அழுக்குகள் சுற்றவர உள்ள 12 கிராமங்களின் குடி நீரை அசுத்தப்படுத்துவதாகவும் இதனால் நோய் ஏற்படுவதாகவும் கிராம மக்கள் பல தடவைகள் அரச நிறுவனங்களிடம் முறைப்பாடுகள் செய்துள்ளனர். மகிந்த ராஜபக்சவின் சகோதரரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பாசிஸ்ட் பசில் ராஜபக்சவுடன் பேச்சுவார்த்தைகளும் நடத்தியுள்ளனர். பேச்சுக்கள் எந்தப் பலனையும் எட்டாத நிலையில் நேற்று வியாளன் அன்று கிராம மக்கள் அமைதியான ஆர்ப்பாட்டம் ஒன்றை ஒழுங்கு செய்திருந்ததனர்.
ஆர்ப்பாட்டத்தின் நடுவே புகுந்த இலங்கைப் பொலீஸ் கண்ணீர்ப் புகையும் தடியடிப் பிரயோகமும் நடத்தியது. இதனால் போலிசாருடன் கைகலப்பு ஏற்பட்ட நிலையில் இராணுவம் குவிக்கப்பட்டது. இராணுவம் பொதுமக்களை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியது.
இதனைப் படம்பிடிக்கவும் செய்தி சேகரிக்கவும் சென்ற ஊடகவியலாளர்களை கண்மூடித்தனமாகத் தாக்கிய போலிசும் இராணுவமும் அவர்களிடமிருந்த புகைப்படக் கருவிகளைப் பறித்து சேதமாக்கியது.
ஆக, இழப்புக்கள் குறித்த சரியான தகவல்கள் கிடைக்கவ்ல்லை. சம்பவத்தை நேரில் பார்த்த கொழும்பு ஊடகவியலாளரின் தகவலின் அடிப்படையில் இழப்புக்கள் அதிகமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
2011 ஆம் ஆண்டின் பின்னர் பொதுமக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்திய மூன்றாவது சம்பவம் இதுவாகும். முதலில் சுதந்திர வர்த்தக வலையத் தொழிலாளி ஒருவரும், பின்னதாக மீனவத் தொழிலாளி ஒருவரும், இப்போது கிராமவாசி ஒருவரும் இராணுவத்தால் பலியெடுக்கப்பட்டனர்.
தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமைக்காக ராஜப்கச அரசிற்கு எதிராகப் போராடுவதாகக் கூறும் புலம் பெயர் புலிசார் அமைப்புக்களோ, தேசியக் கூட்டமைப்போ இவைகுறித்துக் கண்டுகொள்வதில்லை. ராஜபக்ச அரசு பலவீமடைவது அச்சமடைவதும் சிங்கள மக்கள் மத்தியிலிருந்து உருவாகும் போராட்டங்களைக் கண்டுதான் என்பதை அறிந்திருந்தும் தமிழ் இனவாதிகள் சிஙகளத் தொழிலாளர்களைக் கூட தமது எதிரிகளாக்கி ராஜபக்சவைப் பலப்படுத்துகிறார்கள்.
தமிழ்ப் பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை என்பது பெரும்பான்மைச் சிங்களத் தொழிலாளர்களின் ஒத்துழைப்புடனேயே வென்றெடுக்க முடியும். அவர்களை அன்னியமாக்கி சுய நிர்ணய உரிமையை அழிக்கும் விதேசிகள் தம்மைத் தேசியவாதிகள் என அழைத்துக்கொள்கிறார்கள்.