Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பொதுமக்களை மனிதகேடயங்களாக பயன்படுத்துவதை மிகக்கடுமையாக கண்டிப்பதாக ஐ.நா பாதுகாப்புச் சபை அறிக்கை.

இலங்கையில் மோசமாகிவரும் மனிதாபிமான நிலைமைகள் தொடர்பில் ஐ.நா மன்றத்தின் பாதுகாப்புச்சபையும், தனது பெரும் கவலையை வெளியிட்டுள்ளது.

இலங்கை விடயம் குறித்து மூடிய கதவுகளுக்கு பின்னால் நடத்தப்பட்ட ஆலோசனைக்குப் பிறகு வெளியே வந்த ரஷ்யாவின் ஐ.நாவுக்கான தூதர் விடாலி சர்கின் அவர்கள், அதிகாரப் பூர்வமாக கட்டுப்படுத்தாத அறிக்கை ஒன்றை வாசித்தார்.

அதில், இலங்கையின் வடக்குப் பகுதியில் மோசமாகிவரும் மனிதாபிமான அவல நிலைமைகள் குறித்து, ஐ.நா பாதுகாப்புச் சபையின் பதினைந்து உறுப்பினர்களும், பெரும் கவலையடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறிப்பாக, சமீப நாட்களில் நூற்றுக் கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக வெளியான செய்திகள் குறித்து அவர்கள் பெரும் கவலையடைவதாக ரஷ்ய தூதுவர் கூறினார்.

விடுதலைப்புலிகள் அமைப்பினர் பல ஆண்டுகளாக நடத்தி வரும் பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் தற்போது அவர்கள் பொதுமக்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்துக்கொண்டு, மனித கேடயங்களாக அவர்களை பயன் படுத்துவதை மிகக்கடுமையாக கண்டிப்பதாக தெரிவித்த அவர், பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் இலங்கை அரசுக்கு இருக்கும் சட்டரீதியான உரிமையை தாங்கள் அங்கீகரிப்பதாகவும் கூறினார்.

விடுதலைப்புலிகள் தங்களின் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு, தங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பல்லாயிரக் கணக்கான பொதுமக்களை அங்கிருந்து வெளியேற அனுமதிக்க வேண்டும் என்று கோரிய ஐ.நா மன்றத்தின் பாதுகாப்புசபையின் உறுப்பு நாடுகள், பொதுமக்கள் செறிவாக வாழும் இடங்களில் இலங்கை அரசு கனரக ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்துவதாக வெளியாகும் செய்திகளை கண்டு தாங்கள் ஆழ்ந்த கவலை கொள்வதாகவும் தெரிவித்துள்ளன.

இந்த அறிக்கைக்கான மூலவடிவம் கடந்த திங்கட்கிழமை அங்கு சென்ற பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களால் முன்மொழியப்பட்டதாக கூறப்படுகிறது.

இவர்கள் இலங்கையின் மிகமோசமான மனிதாபிமான நிலைமைகள் தொடர்பில் ஐ.நா மன்றத்தின் பாதுகாப்பு சபை விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்திவந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கை நிலைமைகள் சமீப காலத்தில் மிகமோசமான கட்டத்தை எட்டிய பிறகு, ஐநாவின் பாதுகாப்புச்சபையால் வெளியிடப்பட்ட முதலாவது கடுமையான அறிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

அம்னெஸ்டி இண்டர் நேஷனல், ஹூமன் ரைட்ஸ் வாட்ச் போன்ற சர்வதேச மனித உரிமைகளுக்கான அமைப்புக்கள் இலங்கையில் சார்வதேச சட்டங்கள் அப்பட்டமாக மீறப்படுவதற்கான வலுவான சான்றுகள் உருவாகி வருவதாகவும், அது குறித்து ஐ.நா மன்றத்தின் பாதுகாப்புச்சபை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்த பின்னணியில் இந்த அறிக்கை இன்று வெளியாகியிருப்பதாகவும் அங்குள்ள செய்தியாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

Exit mobile version