அதிகாரத்தை பிரித்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று கொழும்பில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, நண்பர்கள் விக்கிரமபாகு கருணாரத்ன, அசாத் சாலி ஆகியோர் தலைமையிலான கட்சிகள், ஐக்கிய தேசிய கட்சி ஆகிய கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் இடம்பெறும் சமகி என்ற ஐக்கியத்துக்கான மக்கள் சக்தி அமைப்பு, பொதுநலவாய மாநாட்டு வேளையில் கொழும்பு சிறிகோத்த நிலையத்தில் ஒரு மனித உரிமை மாநாட்டினை நடத்தியது. அவ்வேளையில் அந்த மாநாட்டு மண்டபத்தை நோக்கி வந்த பொதுபல செனை அமைப்பினர் அம்மாநாட்டை குழப்ப முயன்றனர். அதனால் அங்கு வன்முறை இடம்பெற்றது.
இந்த சம்பவம் தொடர்பில் நேற்று, சிறிகோத்த மண்டப பகுதியில், குறித்த பொதுபல சேனையினரிடமும், அதன் பொது செயலாளர் கலபொட ஞானசார தேரரிடமும், ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட எம்பி ரவி கருணாநாயக்க தலைமையிலான குழுவினர் மன்னிப்பு கோரியுள்ளனர். இந்த நடவடிக்கை மன்னிப்பு கோரிய நபர்களின் தனிப்பட்டநடவடிக்கையாகும். இது எந்த விதத்திலும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து நாம் ஏற்படுத்தியுள்ள சமகி இயக்கம், எதிர்கட்சிகளின் எதிர்ப்பு இயக்கம் ஆகிய அமைப்புகளை கட்டுப்படுத்தாது.
உண்மையில் அமைதியாக நடைபெற்ற மாநாட்டை குழப்ப வந்தவர்களே, மாநாட்டை நடத்திவர்களிடம் மன்னிப்பு கோரவேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும். குழப்பம் விளைவிக்க வந்த நபர்களிடம், இந்த ஐக்கிய தேசிய கட்சி அரசியல்வாதிகள் மன்னிப்பு கோரியுள்ளது தவறானதாகும். இதையிட்டு நாம் ஆச்சரியப்படுகின்றோம். இவர்கள் எதற்காக மன்னிப்பு கேட்டார்கள் என எமக்கு தெரியாது. இதன் மூலம் இவர்கள் சிங்கள மக்களை சந்தோசப்படுத்த நினைத்தார்களோ தெரியாது. ஆனால், இதன்மூலம் சிங்கள மக்கள் சந்தோசமடைவார்கள் என நான் நினைக்கவில்லை. ஆனால், தமிழ், முஸ்லிம் மக்கள் வெறுப்படைந்துள்ளார்கள்.
இந்த நாட்டில் தமிழ், முஸ்லிம் மக்களின் இன, மத, மொழி சுதந்திரங்களுக்கு ஊறுவிளைவிக்கும் நடவடிக்கைகளில் பொதுபல சேனை தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. சிறுபான்மையினரின் வர்த்தக, தொழில் நடவடிக்கைகளும் இடையூறு செய்கிறது. தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பிலும் இனவாத கருத்துகளை பரப்பி வருகிறது. இவையே உண்மையான பிரிவினைவாத, குழப்பவாத, வன்முறை பயங்கரவாதத்திற்கு அடித்தாளமிடும் செயற்பாடுகள் ஆகும். அதிகாரத்தை பிரித்து நாட்டை ஐக்கியப்படுத்துவது முற்போக்கான செயற்பாடுகள் ஆகும்.
நாம் இந்நாட்டில் ஐக்கியவாதிகள் ஆகும். பொதுபல சேனை, இந்நாட்டில் பிரிவினைவாதிகள் ஆகும். ஆகவே பொதுபல சேனை என்ற பிரிவினைவாத அமைப்பிடமும், அந்த அமைப்பின் பொது செயலாளர் கலபொட ஞானசார தேரரிடமும் இந்நாட்டின் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடம் பொது மன்னிப்பு கோரும்படி நாம் கோருகிறோம்.