Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பொதுத் தொகுதியில் போட்டியிடுவாரா கிருஷ்ணசாமி!

ஆசியாவில் இந்து மதம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் சாதிக் கொடுமைகளும் தீண்டாமைகளும் அதன் இயல்பாக இருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் தீண்டாமைக்கொடுமைகள் உண்டு,. காரணம் இந்து மதத்தின் இயல்பே தீண்டாமைதான்.

இந்திய அரசியல் சாசனத்தை எழுதிய மாமேதை அண்ணல் அம்பேத்கர் இதை காலம் முழுக்க அனுபவித்து விட்டு “இந்துவாக பிறந்தேன் இந்துவாக சாகமாட்டேன்” என்று பல  லட்சம் மகர் மக்களுடன் பௌத்தம் தழுவினார். இந்து மதத்தில் இருக்கும் வரை நீங்கள் இந்த தீண்டாமைக் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும். அல்லது சாதி இந்துக்களுடன் நீங்கள் போராடிக் கொண்டே இருக்க வேண்டும். நீங்கள் மட்டுமல்ல சந்ததி சந்தியாக போராடிக் கொண்டிருக்க வேண்டும். இப்படி போராடிப் போராடியே சாவதை விட இந்து மதத்தை விட்டு வெளியேறி விட்டால் நாம் அக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் விடுதலை அடைவோம் என்றார். காரணம் நாம் சொத்து சேர்க்கக் கூடாது, தெருவில் நடக்கக் கூடாது, கல்வி கற்கக் கூடாது என்று சொல்லும் ஒரு மதம் எப்படி நமக்கான மதமாக இருக்க முடியும் இந்து மதம் அதைத்தானே சொல்கிறது என்றும் பேசினார்.

பட்டியல் இன மக்களாக வாழும் இந்து தாழ்த்தப்பட்ட மக்கள்  இந்து மதத்தில் இருந்து மாறுவது ஒன்றே சாதியில் இருந்து விடுதலை என்றார் அண்ணல் அம்பேத்கர். ஆனால் அவர் பெயரைச் சொல்லி அரசியல் செய்து வந்த புதிய தமிழகம் கிருஷ்ணசாமி சாதியின் பெயரை மாற்றி பட்டியலில் இருந்து வெளியேற வேண்டும் என்கிறார். தமிழகத்தில் அவர் வெளியேறச் சொல்லும் பள்ளர் என்ற சாதியினர் 30 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் உள்ளார்கள். இவர்கள் 18% இட ஒதுக்கீட்டை இதுவரை அனுபவித்து வேலை வாய்ப்புகளை பெற்று வந்தனர். சமூகப் பண்பாட்டு வளர்ச்சியில் இந்த  இட ஒதுக்கீட்டு ஆற்றிய பங்கு அளப்பரியது.

தவிறவும் பள்ளர் சாதி மக்கள் இன்று தங்கள் மீதான சாதி இந்துக்களின் வன்முறைகளுக்கு சரியான பதிலடி கொடுத்து வருகிறார்கள். எதிர்த்தாக்குதல் நடத்தி வருகிறார்கள். முன்னேறி வரும் ஒரு அடித்தட்டு சாதியின் நிலையை இந்து மதத்தோடு ஐக்கியமாக்க வே கிருஷ்ணசாமியின் கோரிக்கையை ஏற்று பள்ளர் சாதி மக்களை தேவேந்திர குல வேளாளர்கள் என மாற்ற இருக்கிறது மோடி. அரசு.

இது சாதி மாற்றம் அல்ல பெயர் மாற்றம் மட்டுமே அம்பேத்கர் பெயரை மாற்றிக் கொள்வதால் பலன் ஏதுவும் இல்லை என்று முன்பே சொல்லியிருக்கிறார். ஆனால் தனது விருப்பங்களையும்,  தனது ஆசைகளையும் மக்களின் விருப்பமாக கட்டமைக்கும் கிருஷ்ணசாமி பள்ளர் மக்களின் இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோருகிறார்.

இதுவரை பொதுத் தொகுதி எதிலும் போட்டியிடாமல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள தனித் தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டு வெல்லும் கிருஷ்ணசாமி சாதிச்சான்றிதழைக் கூட கிழித்துப் போடவில்லை.

பட்டியல் சமூகத்தில் இருந்து மக்களை வெளியேற்ற வேண்டும் எனச் சொல்லும் கிருஷ்ணசாமி வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் தனித் தொகுதியில் போட்டியிடாமல் பொதுத் தொகுதியில் போட்டியிடுவரா என்ற கேள்வி அவர் சார்ந்த கட்சியினராலேயே கேட்கப்படுகிறது.

Exit mobile version