Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பொட்டு அம்மான் கொழும்பிலிருந்து தப்பினாரா?:எம்மைப் பொறுத்தவரை பொட்டுஅம்மான் இறந்து விட்டார் என்பதே உண்மை:பிரிகேடியர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் உயிருடன் இருப்பதாக இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் அரசிடம் உறுதிப்படுத்தியமை தொடர்பான செய்தியை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நிராகரித்துள்ளார்.

எம்மைப் பொறுத்தவரை பொட்டுஅம்மான் இறந்து விட்டார் என்பதே உண்மை. ஆனால் அவரது சடலம் இதுவரை எமக்குக்கிடைக்கவில்லையென்றும் அவர்  தெரிவித்தார்.

விடுதலைப்புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் உயிருடன் இருப்பதை இலங்கை இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினர் அரசாங்கத்திடம் உறுதிப்படுத்தி உள்ளனர். விடுதலைப்புலி உறுப் பினர்களில் காயமடைந்த ஒருவர் குறித்தும் நாட்டிலிருந்து தப்பி செல்லத் தயாரான நிலையில் இருந்த இன்னொருவர் குறித்தும் புலிகளின் தகவல் தொடர்புகள் மூலம் தகவல்களை அறிந்துகொண்டதாக இராணுவப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்ததாக இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,அவர்களில் புலிகளின் உளவுப்பிரிவுத் தலைவரான பொட்டு அம்மானும் ஒருவர் என்பதும், அவரை குருவி என்ற புனை பெயரால் புலிகள் குறிப்பிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதே சமயம் இராணுவத்தினரால் கைது செய்யப்பட் டிருந்த கொழும்பு பிரபா என்றழைக்கப்படும் விடுதலைப் புலி இயக்கத்தின் உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவல்களுக்கு அமைய இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொழும்பில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் வெள்ளவத்தை பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் 6ஆவது மாடியை இராணுவத்தினர் சோதனையிட்டுள்ளனர்.

எனினும் இராணுவத்தினர் அங்கு செல்லும் முன்னரே அங்கிருந்தவர்கள் தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகின்றது. இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ள நபர் குறிப்பிட்ட இடத்தில் விடுதலைப் புலிகளின் புலனாய்வு பிரிவினர் இருப்பதாக தகவல்களை வழங்கியுள்ளார்.

இந்த தகவல் வழங்கப்பட்ட சில மணி நேரத்தில் புலிகளின் புலனாய்வு பிரிவினர் என கூறப்படுவோர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதனை பார்க்கும் போது புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு நகரில் வலுவான நிலையில் இருப்பது உறுதியாக தெரிவிப்பதாக இராணுவத் தரப்பு தகவல்கள் கூறுகின்றன.

விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவின் தலைவர் உயிருடன் இருப்பது உறுதியாகி உள்ள நிலையில் அவர்கள் நாட்டில் இருந்து தப்பி சென்றது குறித்து தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராணுவத் தரப்பு தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன இவ்வாறு அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.

Exit mobile version