தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு இணையான அதிகாரத்திலிருந்த பொட்டு அம்மான் வன்னிப் படுகொலைகளின் போது கொல்லப்பட்டார் அல்லது சரணடைந்தார் எனப் பல தகவல்கள் வெளியாகியிருந்தன.
இவரது சகோதரர் தமிழீழ விடுதலைப் புலிகளோடு எந்தத் தொடர்புமற்றவராக ஜேர்மனிய நாட்டில் அகதியாகவும் பின்னர் அந்த நாட்டின் குடியுரிமை பெற்றும் கடந்த 30 வருடங்களாக வாழ்ந்தவர்.
யாழ்ப்பாணத்தில் அவரது சொந்த ஊரான அரியாலைப் பகுதியில் அவருக்குச் சொந்தமான வீட்டை இராணுவத் துணைக்குழுக்கள் பயன்படுத்தி வந்ததாகவும் அதனை மீட்பதற்காகவும் அவர் பல தடவை அங்கு சென்றுவந்ததாகக் கூறப்படுகிறது. கோடைகால விடுமுறைக்குத் தனது வீட்டை மீட்பதற்காக அரியாலைக்குச் சென்றவர் அங்கு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இராணுவத் துணைக்குழுக்களும் புலனாய்வுப் பிரிவும் இணைந்தே இக் கொலையை நடத்தியிருக்கலாம் என்ற சந்தேகங்கள் வலுவடைகின்றன.
புலம் பெயர் நாட்டில் அந்த நாட்டின் குடியுரிமை பெற்ற ஒருவருக்கே இந்த நிலையென்றால் அங்கு வாழும் முன்னை நாள் போராளிகளது அவலங்கள் எவ்வளவு கோரமானவை என அனுமானிக்கலாம்.
இந்த லட்சணத்தில் சட்டம் பேசி உரிமை பெற்றுத் தருவதாக மக்களை ஏமாற்றும் விக்னேஸ்வரனும் அவரது கட்சியும் இக் கொலை குறித்து மூச்சுக்கூடவிடவில்லை. அவரது உடலை ஜேர்மனிக்குக் கொண்டுவருவதிலுள்ள இழுபறி நிலைக்கு சட்டத்தரணிகள் சங்கமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. ஜேர்மனியக் குடிமகன் கொல்லப்பட்டதற்கு ஜேர்மனிய அரசும் மௌனம் சாதிக்கிறது. இதுவே வெள்ளையின ஜேர்மனியராகவிருந்தால் அவர் உலகம் முழுவதும் பேசப்பட்டிருப்பார்.