Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

போர் முடிந்தாலே அமைதி வரும் என்பதால் மெளனமாக இருந்தோம்

இன்று தலைமைச் செயலகத்தில் கருணாநிதி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
ஜெயலலிதவின் ஈழத் தாய் வேடம் இப்போது சிறிது சிறிதாகக் கலைந்து வர, கருணாநிதி குடும்பம் டெசோ தோல்வியையும் பொருட்படுத்தாமல் களத்தில் குதித்திருக்கிறது.
இன்று தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கருணாநிதி, இலங்கை தமிழர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற உதவிகள் உங்களுக்கு திருப்தியாக இருக்கிறதா? என்ற கேள்விக்கு, “இதுவரை வந்துள்ள தகவல்கள்படி, அங்கே பணிகள் திருப்தி இல்லை என்ற செய்தி எங்களுக்கு கிடைத்திருக்கின்ற காரணத்தால் தான், அதையும் இந்த மகஜரில் சேர்த்து, அதைப் பற்றியும் விரிவாக எடுத்துச் சொல்ல ஐ.நாவுக்கு பயணம் செய்யும் பாலுவும், ஸ்டாலினும் முனைவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிலளித்தார்.
இலங்கையில், போர் முடிந்த பிறகும் எதிர்பார்த்த அமைதி ஒன்றும் ஏற்படவில்லை என்பதற்கு ராணுவத்தை வெளியேற்ற நடத்தப்பட்ட போராட்டங்கள் எல்லாம் அடையாளங்கள். முள்வேலி முகாம்களிலே கொடுமைகள் இன்னும் நின்றபாடில்லை. முள்வேலி முகாம் மாத்திரமல்ல, அந்த முகாமுக்கு வெளியே இருக்கின்ற ஈழத் தமிழர்களும் கொடுமைகளுக்கு உள்ளாகிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
இன்றைக்கு ஐ.நா. மன்றத்திற்கு செல்கின்ற இதுபோன்ற நடவடிக்கைகளை முன்பே எடுத்திருந்தால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறார்களே? என்று கேட்டதற்கு, அப்போது தான் போர் நடந்து கொண்டிருந்தது. போர் முடிந்த பிறகு அங்கே அமைதி ஏற்படும் என்பதால் அந்தச் சூழ்நிலையில் நாங்கள் அந்த முயற்சிகளை மேற்கொள்ள இயலவில்லை என்றார் கருணாநிதி.
சிறப்பு முகாம்களில் இருப்பவர்கள், திறந்த வெளி முகாம்களுக்கு அனுப்புவதற்காக மத்திய அரசுடன் நீங்கள் பேச்சுவார்த்தை நடத்துவீர்களா? என்று கேள்விக்கு, சிறப்பு முகாம்களில் இருப்பவர்களைப் பற்றி மத்திய அரசுக்கு தெரியும். மத்திய அரசு இலங்கை அரசு செய்வதை விட முந்திக் கொண்டு உதவிகளைச் செய்ய வேண்டும் என்பது என்னுடைய ஆசை.
அதைச் செய்வார்களா என்ற கேள்விக்கு மத்திய அரசு நல்ல பதிலை அளிக்க வேண்டும். இதற்கு மத்திய அரசு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று பதிலளித்தார்.
மத்திய அரசு, இலங்கை அதிபர் இந்தியாவுக்கு வந்தபோது அவருக்கு சிகப்புக் கம்பள வரவேற்பு கொடுத்திருக்கிறதே? என்று கேள்வி கேட்டதற்கு, ஒரு நாட்டினுடைய தலைவராக அந்த நாட்டு மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள், ஜனநாயகம் அனுமதிக்கப்படுகிற வரையிலே அந்தப் பதவியிலே இருப்பவர்கள் அதிபர் பொறுப்பிலிருந்து இன்னொரு நாட்டிற்கு வந்தால், அப்படி வருகிறவர்களை வரவேற்பு என்பது இன்னும் சொல்லப் போனால் அவர்களுக்கு விருந்து கூட அளிப்பதென்பது மரபாகவே இருந்து வருகிறது. அந்த மரபையும், மீறுகின்ற உணர்வு, இந்தியாவிலே இருக்கின்ற அரசுக்கு வர வேண்டாமா என்று நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள். எல்லோரிடத்திலும் அந்த உறுதியை எதிர்பார்க்க முடியாது. உங்களுக்கு ஒன்றை நினைவூட்டுகிறேன். அமைதிப்படை என்ற பெயரால், இலங்கைக்குச் சென்று அங்கேயிருந்த தமிழர்களை அமைதிக் குறைவாக நடத்துகின்ற அளவிற்கு நம்முடைய இந்திய நாட்டு சிப்பாய்கள் அங்கே சென்று, பிறகு அவர்கள் திரும்பி வந்த போது, அந்த அமைதிப்படைக்கு வரவேற்பு அளிக்க வேண்டும் என்ற மரபு வழியில், நான் அறிவுறுத்தப்பட்டேன். தமிழ்நாட்டில் அன்றைக்கு இருந்த ஆளுநர் மூலமாக வலியுறுத்தப்பட்டேன். ஆனால் நான், என்னுடைய தமிழர்களைக் கொன்று குவித்த அந்த அமைதிப் படைக்கு வரவேற்பளிக்க நான் செல்ல முடியாது என்று முதலமைச்சராக இருந்து கொண்டே நான் மறுத்ததை நீங்கள் வசதியாக மறந்து விடாதீர்கள், ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் என்றார்.

Exit mobile version