Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

போர்க் குற்றங்கள் தொடர்பாக பொய்த் தகவல்களைத் தெரிவிப்பதற்கு மருத்துவர்களை இலங்கை அரசு நிர்ப்பந்தம்: ‘த ரைம்ஸ்’

 

மோதல் பிரதேசங்களில் பணியாற்றிய மருத்துவர்களை பொய் கூறுமாறு இலங்கை அரசாங்கம் அழுத்தம் கொடுத்துள்ளதாக த ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளதுடன், முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அப்பாவி மக்களை விடுதலை செய்யும் வரையில்  இலங்கையை உலக நாடுகள் புறக்கணிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளது.
அத்துடன் இடம்பெயர்ந்த முகாம்களில் மேற்கொள்ளும் மனிதாபிமானப் பணிகளைக் குறைக்குமாறு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்துக்கு  இலங்கை அரசு உத்தரவிட்டிருப்பது ஒரு பாரதூரமான விடயமாகும் எனவும் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக  ‘த ரைம்ஸ்’ இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள கட்டுரையில் மேலும் முக்கியமாகத் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

“போர்க் குற்றங்கள் தொடர்பாக பொய்த் தகவல்களைத் தெரிவிப்பதற்கு மருத்துவர்களை நிர்ப்பந்திக்கும் வெறுக்கத்தக்க சம்பவங்கள் சில நடைபெற்றிருக்கின்றன.

தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் ஐந்து மருத்துவர்களும் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் தோன்றி போரின் இறுதிக்கால கட்டத்தில் ஏற்பட்ட பொதுமக்களின் இழப்புக்கள் தொடர்பாக தாம் முன்னர் தெரிவித்திருந்த தகவல்களை மறுத்தார்கள்.

தமது உயிர்களைப் பணயமாக வைத்து பல உயிர்களைப் பாதுகாத்தவர்கள் இப்போது அரசியல் நோக்கங்களுக்காக இவ்வாறான செயற்பாட்டுக்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள்.

கடற்கரையோரமாகவுள்ள ஒரு சிறிய நிலப்பரப்புக்குள் விடுதலைப்புலிகள் முடக்கப்பட்டிருந்த நிலையில், இராணுவத்தின் கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதல்களில் கொல்லப்படுபவர்கள் பற்றிய விபரங்களை அறிந்துகொள்வதற்கான ஒரே தகவல் மூலமாக இந்த மருத்துவர்களே இருந்துள்ளார்கள்.

ஜனவரிக்கும் மே மாதத்துக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் 7 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து வெளியான செய்மதி ஒளிப்படங்களின் ஆதாரத்துடன் இதில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் அதிகமானதாக இருக்க வேண்டும் என்ற தகவலை ‘த ரைம்ஸ்’ வெளியிட்டிருந்தது.

இது தொடர்பான அனைத்துலக கண்டனங்கள்  இலங்கை அரசுக்குச் சங்கடமான நிலையைக் கொடுத்திருந்தது. இந்நிலையில் போர் உச்சகட்டத்தை அடைந்திருந்தபோது வெளியேறிய மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களைப் பற்றிய தகவல்கள் எதுவும் புதன்கிழமை ஊடகவியலாளர்கள் முன்னிலையில் இவர்கள் கொண்டுவரப்படும் வரையில் வெளிவரவில்லை.

மருத்துவர்கள் நிர்ப்பந்தத்தின் காரணமாகவே தமது முன்னைய அறிக்கைகளை தவறானவை எனத் தெரிவித்துள்ளார்கள் என்பது தெளிவாகத் தெரிகின்றது. தாம் முன்னர் தெரிவித்த பொதுமக்களின் இழப்புக்கள் பற்றிய தகவல்களைக் குறைத்துக் கூறிய இவர்கள், முக்கிய மருத்துவமனை ஒன்று எறிகணைத் தாக்குதலுக்குள்ளானதாகத் தெரிவித்ததையும் மறுத்தனர்.

அத்துடன், விடுதலைப் புலிகளின் நிர்ப்பந்தத்தினால்தான் தாம் இவ்வாறு மக்களின் இழப்புக்களை மிகைப்படுத்திக் கூறியதாகவும் குறிப்பிட்டார்கள். கொழும்பின் பிரசார வெற்றியில் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சியால் சிலரை முட்டாள்கள் ஆக்கலாம்.

அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் மேற்கொண்டுள்ள பணிகளை குறைக்குமாறு  இலங்கை அரசு உத்தரவிட்டிருப்பதுடன், முகாம்களில் மேற்கொண்டுவரும் உதவிப் பணிகளை நிறுத்துமாறும் உத்தரவிட்டிருக்கின்றது.

இப்போது இந்த முகாம்களுக்கு வெளி உதவிகள் தேவை இல்லை என  இலங்கை அரசு மதிப்பிடுகின்றது. ‘நலன்புரி கிராமங்களில்’ தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் தேவைகளை தன்னால் தனித்துப் பூர்த்தி செய்ய முடியும் எனவும்  இலங்கை அரசு கூறுகின்றது.

அரசின் இந்தக் கருத்து பாரதூரமான பொய்யாகும். அனைத்துலக உதவி நிறுவனங்களின் தகவல்களின்படி இடம்பெயர்ந்தவர்களுக்கான பாரிய முகாம் ஒன்றில் வாராந்தம் 1,400 பேர் மரணமடைவதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

போரில் அரசு வெற்றிபெற்ற பின்னர், போராளிகளை அடையாளம் காண்பதற்காக என்ற பெயரில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மக்கள் பட்டினியாலும், நோய்களாலும், முகாம்களின் மோசமான நிலைமைகளாலும், அளவுக்கு அதிகமானவர்களை முகாம்களில் வைத்திருப்பதாலும், குடும்ப உறுப்பினர்களைத் தனித்தனியாகப் பிரித்து வைத்திருப்பதாலும் பெரும் துன்பங்களை அனுபவிக்கின்றார்கள்.

இவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எதனையும் அரசு மேற்கொள்ளவில்லை. சனத்தொகையில் காணப்படும் சமநிலையை மாற்றியமைப்பதற்காக திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்படும் ‘இனச்சுத்திகரிப்பு’ நடவடிக்கையே இது என இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் வெளியேறுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டால், வெளி உலகம் இப்பிரச்சினையில் தலையிட வேண்டும். நிதி நெருக்கடிகளாலும், போரின் பின்னரான அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகவும் அனைத்துலக நாணய நிதியத்திடம் இருந்து 1.9 மில்லியன் டொலர்களை  இலங்கை அரசு எதிர்பார்த்திருக்கின்றது.

சுயாதீனமான உதவி நிறுவனங்கள் முகாம்களிலுள்ள தமிழர்களுக்கான மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்வதற்கான உறுதியளிக்கப்பட்டு முகாம்களில் உள்ளவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு தொடங்காத வரையில் இந்த நிதி உதவி வழங்கப்படக்கூடாது.

பொதுநலவாய அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபை என்பவை மட்டுமன்றி துடுப்பாட்டக் குழுக்கள் கூட அதுவரையில் இலங்கையைப் புறக்கணிக்க வேண்டும். உலகம் கண்டுகொள்ளக் கூடாது என்ற எதிர்பார்ப்புடன் தடுப்பு முகாம் ஒன்றை அரசு ஒன்று நடத்த முடியாது. இவ்வாறு ‘த ரைம்ஸ்’  தெரிவித்திருக்கின்றது.

Exit mobile version