கடந்த சனிக்கிழமை நள்ளிரவு வேளையில் வீடோன்றினை உடைத்துப் புகுந்த இளைஞர் கோஷ்டி ஒன்று யுவதியொருவரை வல்லுறவுக்குட்படுத்திய அதிர்ச்சி மிகுந்த சம்பவம் வேலணையில் இடம் பெற்றுள்ளது தடுக்க முற்பட்ட குடும்பத்தினரையும் இக்கோஷ்டியினர் தாக்கியுள்ளனர்.
யாழ் நகரின் புறநகர்ப் பகுதியிலிருந்து ஆட்டோக்களில் வந்ததாகக கருதப்படும் சுமார் பத்து இளைஞர்களைக் கொண்ட கோஷ்டியினர், தனிமையிலிருந்த வீடொன்றினுள் புகுந்து மேற்படிக் கோரச்சம்பவத்தினைப் புரிந்துள்ளனர். பாதிக்கப்பட்டட பெண் வல்லுறவுக்குட்படுத்த முயன்ற வேளை போராடிய போது கடிகாயங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளக்கப்பட்டுள்ளதுடன், தடுக்க முற்பட்ட குடும்பத்தினர் உலக்கையினால் தாக்கப்பட்டு காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டும் உள்ளார்கள்.
பாதிக்கப்பட்ட யுவதி வேலனை உப பொலிஸ் நிலையத்தில் முறையிட்ட போதும் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில் நஞ்சு விதையருத்தி தற்கொலை செய்ய முற்பட்டு யாழ்.வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
பாதிக்கப்பட்ட யுவதி தன்னைப் பலாத்காரம் செய்ய முற்பட்டவர்களில் இருவரின் பெயரைப் பொலிஸாரிடம் தெரிவித்திருந்ததுடன், முக்கிய நபர் வேலணைப் பகுதியிலேயே தங்கியிருப்பதாகவும் தெரிவத்திருந்தும் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. அதே வேளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய கோஷ்டியினர், யாழ். ஆஸ்பத்திரிக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்கைள மிரட்டியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
புலிகள் அழிக்கப்பட்டு சமாதானம் கொண்டு வரப்பட்டள்ளதாக பெரும் பிரச்சாரத்தை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற வேளையில், நாட்டின் பலபாகங்களிலும் இருந்தும் பாலியல் வல்லுறவுச் சம்பவங்களும் சிறுவர் துஷ்பிரயோக நடவடிக்கைகளும் அதிகார துஷ்பிரயோகச் சம்பவங்களும் அதிகளவில் நடைபெற்று வருகின்றமை பெரும் அச்சநிலைக்கு இட்டுச் சென்றிருக்கிறது. எல்லாப் பாவங்களையும் புலிகளே மேற்கொண்டு வருவதாக அரசாங்கமும் பல நிறுவனங்களும் முன்னர் கூறிவந்தன. ஆனால் இன்று இச்சம்பவங்கள் பற்றி பொலிஸாரும் சமூக நிறுவனங்களும் ஏன் அரசாங்கமும் கவலையோ அக்கறையோ கொண்டதாகத் தெரியவில்லை.
சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரித்து வரும் நிலை பற்றி அதற்குப் பொறுப்பான பிரதி அமைச்சர் ஒருவர் “ஆசியாவிலே இலங்கையில் சிறுவர் பிரயோகம் குறைவாக இருப்பதாக” பெருமைப்பட்டு இருக்கிறார். புலிகள் காலத்திலும் இவை இருந்தன. ஆனால் புலிகள் இன்று இல்லாத நிலையில் இது பற்றி அதிகம் முறைப்பாடுகள் பதிவாகின்றன என அதிகரித்து வரும் துஷ்பிரயோகங்களுக்கான காரணத்தினையும் அந்த அமைச்சர் விளக்கியிருக்கிறார்.!
இம்மாத தினசரிகளில் வெளிவந்த சில தகவல்கள் பலரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ள போதும் அரசாங்க அமைச்சர்கள் மட்டும் எந்தக் கவலையும் இன்றி இருந்து வருகிறார்கள். இம்மாத தினசரிகளில் வெளிவந்த தகவல்கள் பெருமளவானவை சிறுமிகள் தொடர்பான பாலியல் துஷ்பிரயோகங்கள் – வல்லுறவுச் சம்பவங்களே. இதுதனால்தான் அமைச்சர்கள் மட்டத்தில் எந்தக் கவலையும் தோன்றவில்லை போலும் !
கம்பளை : குருந்துவத்தைப் பகுதியில் இரண்டு வயதுச் சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 14 வயது சிறுவனைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நீர்கொழும்பில், ஆறுமாதக் குழந்தையைக் கொலை செய்த (13.09.2009)குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட தந்தைக்கு 8 வருடச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிலாபம்: சிலாபத்தில் தந்தையைக் கட்டிப்போட்டு விட்டு 15 வயது மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சம்பவம் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட இருவர் 40 முதல் 45 வயது மதிக்கத்தக்க திருமணமானவர்கள் எனவும் தந்தையுடனான குரோதத்திற்கு பழி தீர்க்குமாகவே இக்குற்றத்தினை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
யாழ்.பளை: யாழ்.பளையில் வெள்ளைவானில் வந்தோரால் இரு மாணவிகள் கடத்தல்
கிளிநொச்சி, விசுவமடுப் பகுதியில் இரு பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு வழக்கின் சந்தேக நபர்களான நான்கு இராணுவத்தினரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
ஆனமடுவ: ஆனமடுவ பிரதேசத்தில்; 11 வயதான தனது பேத்தியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பாட்டானர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கட்டானை: கட்டானையில் இரண்டரை வயதுச் சிறுமியை மரத்தில் கட்டி வைத்து கொடுமைப்படுத்தியதாக தந்தைக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சிலாபம்: சிலாபம் பிங்கதெனிய பிரதேசத்தில் சகோதரனால் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகிய சகோதரியான 14 வயதுச் சிறுமி பாதிக்கப்பட்ட சம்பவம் வெளித்தெரிய வந்துள்ளது.
பிபிலை: பிபிலைப் பிரதேசத்தில் பாடசாலை மாணவியொருவரைப் பாட்டனார் மற்றும் இரு இளைஞர்களால் தொடர்ச்சியாக பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியது தொடர்பாக தெரிய வந்துள்ளது.பிபிலையில் 13 வயதுடைய சகோதரியை வல்லுறவுக்குட்படுத்தி கர்ப்பமடையச் செய்த சகோதரனான 23 வயது இளைஞர் பற்றிய தகவலும் தொயிவந்துள்ளது.
வன்னியில் அனாதரவாக விடப்பட்டிருக்கும் போரால் பாதிப்படைந்த தமிழப் பெண்கள் வன்முறைக்கு ஈடுபடுத்தப்படுவதாக ஆதரபூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாலியல் வல்லுறவுகள் நடக்கட்டும், சிறுவர் துஷ்பிரயோகங்கள் நடக்கட்டும், அதிகார துஷ் பிரயோகங்கள் நடக்கட்டும். டெங்கு மரணங்கள் நடக்கட்டும், மருந்து நஞ்சாகி மாணவர்கள் சாகட்டும். அரசாங்கம் தேசத்தினை முன்னேற்றும் பணியில் முழு முனைப்புடன் இருக்கும் !
காரண கரியங்களை விளக்கி ஊடக அறிக்கைகளை வெளியிடலாம் ! மிஞ்சினால் ஒரு ஆணைக்குழுவையும் அமைக்கலாம்!!