Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

போராடும் பூமி

 1914 முதல் 1918 வரை நடந்த முதல் உலகப்போரை அறிந்திருக்கிறோம். 1939 முதல் 1945 வரை நடந்து முடிந்த இரண்டாம் உலகப்போரை தெரிந்திருக்கிறோம். போர் என்றால் பாதிப்பு. போரில் ஈடுபடும் நாடுகளுக்கு மட்டுமல்ல. உலகிற்கே பாதிப்பு.
போர் என்பது இன்று நடைபெறும் ஒன்றல்ல. காலம் காலமாக வரலாற்றில் ஏற்படும் சிவப்பு பதிவுகள். கல், கத்தி கொண்டு போரிட தொடங்கிய மனிதன், வில் அம்பு என முன்னேறினான். காலால் படை, குதிரைப்படை, யானைப்படை என அணிவகுத்தான். துப்பாக்கி, பீரங்கி என தளவாடங்கள் வளர்த்தான். தரைப்படை, விமானப்படை, கடல் படை என படைகள் பெருக்கினான். தற்கொலை தாக்குதல் என அச்சமூட்டினான். அனைத்தையும் கடந்து ஆளில்லாமலேயே இயக்கப்பட்டு எதிரியை அழிக்கும் தொழில் நுட்பங்களையும் தெரிந்து விட்டான். எல்லா காலங்களிலும் போர்கள் நடந்துள்ளன. போர்களில் பயன்படுத்தப்படும் கருவிகளும் அதன் வடிவங்களும் மாறுபட்டதேயன்றி போர்கள் குறையவில்லை. அனைத்தும் எதற்கு? பாதுகாப்பு என்ற பெயரில் உள்நாட்டு மக்களை காக்கிறோம் என மானுடத்தை அழிக்கத்தானே!!!
இப்போர்களை வரலாற்றில் படித்திருக்கிறோம். நாம் வாழும் நாட்களில் பல நாடுகளில் போர்கள் நடப்பதை பார்க்கிறோம். அதன் பாதிப்புகளை வாழ்க்கையில் அனுபவித்து இருக்கிறோம். நமக்கு தெரியாமலேயே போர் ஒன்றை சந்தித்து, அனுபவித்து, சமாளித்து கொண்டிருக்கறோம். உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் போர்களின் விளைவுகளை நாம் இன்று அனுபவித்து கொண்டிருப்பதை நான் குறிப்பிடவில்லை. அப்படியானால் வேறு என்ன போர்?
2004 டிசம்பர் திங்கள் 26 ஆம் நாள் உலகையே அலறவைத்த நாள். இந்தோனேஷியாவின் சுமத்திரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உருவான சுனாமி பேரலை இந்தோனேஷியா, அதன் சுற்றுப்பகுதிகள், தாய்லாந்து, இலங்கை, மாலத்தீவு, இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் தமிழக கடற்கரை ஓரப்பகுதிகளான நாகப்பட்டினம், கடலூர், கன்னியாகுமரி, குளச்சல், சென்னை போன்ற பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான உயிர்களுக்கும், உடைமைகளுக்கும் நாசம் ஏற்படுத்தியது.
உலகிலேயே பாதுகாப்பான நாடு என பலரும் எண்ணிய அமெரிக்கா 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்களில் ஏற்பட்ட கத்தரினா சூறாவளியை சமாளிக்க முடியாமல் திண்டாடியது நாம் அறிந்ததே.
வழக்கமாக மழை என்றால் ஆனந்தம் தான் பொங்கும். விவசாய மக்களுக்கு மனம் குளிரும். ஆனால் இன்று மழை என்றால் பயம். வெள்ளப்பெருக்குகள் பல்லாயிரம் உயிர்களை பழிவாங்கும் நிலைகள் தான் எதார்த்தம். சில ஆண்டுகளாக பலிவாங்கப்படும் வாழ்வு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
ஆம்.. மனித செயல்பாடுகளினால் ஏற்படுத்தப்பட்ட காலநிலை மாறுதல்களுக்கு பூமி வழங்கும் பதில் தான் இது. நாம் பூமிக்கு எதிராக செயல்படுவதற்கு அது நம்மீது தொடுக்கும் போர் என்றே சொல்லாம்.
மனித செயல்படுகளினால் வெளியாக்கப்படுகின்ற பசுங்கூட வாயுக்களான கரியமில வாயு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு ஆகியவற்றின் அதிமிக வெளியேற்றத்தால் காலநிலையில் மாறுதல்கள் ஏற்படுகின்றன. இதை காலநிலை மாற்றம் என்கிறோம். இயற்கையில் இருக்க வேண்டிய அளவைவிட பசுங்கூட வாயுக்களின் வெளியேற்றம் அதிகமாகிறபோது காலநிலை மாற்றம் புவி வெப்பமேறலோடு பயன்படுத்தப்படுகிறது. 1970 – களிலிருந்து பூமியின் வெப்பம் சராசரியாக 4 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது, பசுங்கூட வாயுக்களின் அதிமிகு வெளியேற்றத்தால் என அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
பசுங்கூட வாயுக்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் வெகுகாலம் வளிமண்டலத்தில் நிலைத்திருக்கிறது. எனவே பல ஆண்டுகளுக்கு அதன் விளைவு நமக்கு தெரிவதில்லை. எடுத்துக்காட்டாக இந்த வருடம் நாம் வெளியேற்றும் பசுங்கூட வாயுக்களின் விளைவை 40 50 ஆண்டுகளுக்கு பின்னர் தான் உணர முடியும்.
காலநிலை மாற்றம் பற்றி ஆய்கின்றபோது பெருங்கடல்களும், வளிமண்டலமும் தட்பவெப்பநிலை அதிகரிப்பு, ஆற்றல் மிகுந்த சூறாவளிகள், வெள்ளப்பெருக்குகள், கடல் மட்டம் உயர்வு ஆகியவற்றை கொண்டுவருவதோடல்லாமல் பூமியும் அவைகளோடு கைகோர்த்துவிட்ட நிலைமையைத் தான் கண்டுபிடிக்க முடிகிறது. பூமி பந்தின் முந்தைய வரலாற்றை பார்க்கும்போது வானிலை மாறுபாடுகள் வழமையாக தோன்றிய போதிலும் கடந்த உறைபனிக் காலத்தில் வானிலைக்கு அப்பாற்பட்டமாறுதல்கள் தெரிந்தன. எரிமலைகள், நிலநடுக்கம், கடலடியில் நிலச்சரிவுகள், சுனாமி பேரலைகள் என பூமி பல மாற்றங்களை கண்டது.
மனித செயல்பாடுகளினால் ஏற்படும் காலநிலை மாற்றங்களினால் இது போன்ற பதில்களை பூமியிலிருந்து நாம் பெறுவதோடு வெப்பமேறிய பூமியை மட்டுமல்ல கொடூரமான எதிர்காலத்தை தான் காண நேரிடும்.
இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிலநடுக்கோட்டிற்கு மேற்பட்ட உலகக்கண்டங்களை பனி மூடியிருந்தது. இதற்கான நீரை கடலிலிருந்து எடுத்துக் கொண்டுடது. இதன் விளைவாக உலக கடல் மட்டம் இப்போது நாம் பார்ப்பதை விட 130 மீட்டர் குறைவாக இருந்துள்ளது. பிரிட்டனுக்கும் ஐரோப்பிய கண்டத்திற்கும் மற்றும் அலாஸ்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நிலஅமைப்பால் எண்பிக்கப்படுகிறது.
பனி உருகியபோது கடல் மட்டம் உயர தொடங்கியது. சில நூற்றாண்டுகளில் அந்த அளவு பல மீட்டர்களாக இருந்தது. 1990 – களின் நடுவில் ஐரோப்பிய ஒன்றியம் நடத்திய ஆய்வில் மத்தியதரைக்கடல் பகுதியில் கடல் மட்ட உயர்வுக்கும் தாழ்வுக்கும், இத்தாலி மற்றும் கிரீஸ்சிலும் ஏற்பட்ட எரிமலை வெடிப்பிற்கும் உள்ள தொடர்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுமார் 18, 000 ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள நிலையைக் காட்டிலும் மத்தியதரைக்கடல் பகுதியில் எரிமலை வெடிப்பு 300 வீதம் அதிகரித்துள்ளது இத்தொடர்பை வெகுவாக நிரூபிக்கும். கிரீன்லாந்து பனிப்படிவங்களில் காணக்கிடக்கின்ற எரிமலைத் துகள்களின் அதிகரிப்பு மற்றும் எரிமலை வெடிப்புக்களால் வடபகுதியில் காணப்படும் சல்பேட் படிவங்கள் முதலியவை இத்தொடர்பை உறுதி செய்கின்றன.
பனி உருகுவதால் அதிகப்படியான தண்ணீர் பெருங்கடல் பூமி தட்டில் சேர்கிறது. 100 மீட்டர்களுக்கும் அதிகமான ஆழமுடைய தண்ணீர் 60 விழுக்காடு எரிமலை ஆபத்து நிறைந்துள்ள கண்டங்களின் கரைகளிலும், தீவுக்கூட்டங்களிலும் சேர்வதால் ஏற்படும் எடையளவு பூமியின் அடித்தட்டை பாதிக்கிறது. பூமியின் அடித்தட்டில் ஏற்படும் எதாவது சிறு அசைவுகளிலே வெடிக்க தயாராக இருக்கும் எரிமலை குழம்பிற்கு இது போதாதா என்ன?
உதாரணமாக அலஸ்காவிலுள்ள பாவ்லொஃப் எரிமலை, அப்பிரதேச கடல்மட்டம் கோடைகாலத்தில் இருப்பதைவிட 30 சென்டிமீட்டர் அதிகமாகவுள்ள குளிர்காலத்தில் தான் ஏற்படுகிறது. இதுபோன்று பிற எரிமலை குழம்பு வெடிப்பதற்கு காலநிலை மாற்றத்தால் ஏற்படும் கடல்மட்ட உயர்வு போதுமானது.
அமெரிக்காவின் காலநிலை மாற்றத்திற்கான உள்நாட்டு அமைப்பு 2100 ஆம் ஆண்டில் கடல் மட்டம் சுமார் 18 லிருந்து 59 சென்டிமீட்டர் உயரமடையும் என எச்சரிக்கை செய்துள்ளது. பனிக்கட்டி படிவங்களில் ஏற்படும் மாறுதல்கள் குறித்து இது எதுவும் குறிப்பிடவில்லை. இந்நூற்றாண்டில் ஒன்று அல்லது இரண்டு மீட்டர் கடல் மடட்ம் உயர்வும் அடுத்த நூற்றாண்டில் மேலும் பல மீட்டர்கள் உயர்வும் இருக்கும் என காலநிலை அறிவியலாளர் மற்றும் நாசாவை சேர்ந்த ஜிம் கான்சன் தெரிவித்துள்ளார். இதர காலநிலை அறிவியலாளர்கள் இவ்வளவைவிட அதிகமாகவே குறிப்பிட்டுள்ளனர்.
இத்தகைய நிகழ்வுகள் மனிதகுலத்தின் அழிவை காட்டுகிறது. ஓரு மீட்டர் கடல்மட்ட உயர்வு மூன்றில் ஒரு பகுதிஉலக விவசாய நிலங்களை அழித்துவிடும். இரண்டு மீட்டர் உயர்வு தேம்ஸ் ஆற்றுப்படுகைகளை வெள்ளக்காடாக்கும். நான்கு மீட்டர் உயர்வு அமெரிக்க கடல் பகுதியில் உள்ள மியாமி நகரத்தை மூழ்கடிக்கும்.
உலகின் வடபகுதியில் உள்ள பனிப்பாறைகள் உருகுகின்றன என்பதை பற்றி பலர் பேசியுள்ளனர். ஆனால் பனிநீரால் ஏற்படும் விளைவை ஆய்ந்த முடிவுகள் மிக சில. கண்டங்களின் கரைகளில் உருகி வரும் பனிக்கட்டி நீரால் ஏற்படுத்தப்படும் அதிக எடையளவால் ஏற்படும் நிலநடுக்கங்கள், கடலுக்கடியில் நிலச்சரிவுகள் நிலத்தட்டின் இடமாற்றத்தை உருவாக்கும்.
8000 ஆண்டுகளுக்கு முன்னர் நார்வே கடற்கரை பகுதிகளில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவு செட்லாண்டு தீவு மற்றும் ஸ்கார்ட்லாந்து கிழக்கு கடற்கரைப்பகுதிகளில் 20 மீட்டர் உயரானமான சுனாமி பேரலையை உருவாக்கியது. கிரீன்லாந்து பகுதிகளில் உள்ள அடிமட்டபனிபடிவங்களில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டால் வட அட்லாண்டிக் பகுதிகள் சுனாமி பேரலையால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
மனித செயல்பாடுகளினால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றத்திற்கு பூமி தனியாக பதிலளிக்கிறது. உலக வெப்பமேறல் என்பது வெறும் வெப்பநிலை உயர்வு, வெள்ளப்பெருக்குகள், வலிமைமிகு சூறாவளிகள் மட்டுமல்ல பூமியின் நிலப்பரப்பு பற்றிய விழிப்புக்கான அழைப்பாகும். மனித போர்களுக்கு எதிர்தாக்குதல்கள், தாக்குதல்களை முறியடித்தல், சமாதானம் என பல முயற்ச்சிகளை மேற்கொள்ளலாம். ஆனால் பூமி தொடர்ந்திருக்கும் இப்போருக்கு நமது பதில் என்ன? பூமி சொல்ல முயற்சிக்கும் செய்திக்கு செவிமடுப்பதே.
நன்றி CRI தமிழ்

Exit mobile version