மைக்கல் பிரவுன் என்ற அமெரிக்க இளைஞன் கறுப்பினத்தைச் சார்ந்த ஒருவர் என்பது மட்டுமல்ல உழைக்கும் வர்கத்தைச் சார்ந்தவர் என்பதால் கொலையாளி எந்த விசாரணையுமின்றி தப்பித்துக்கொண்டார்.
கோபமடைந்த மக்களின் ஆர்பாட்டங்களைப் போலிஸ் ஒடுக்க முற்படுகிறது. அமெரிக்காவின் பல முனைகளில் வன்முறை பரவியுள்ளது. மைக்கல் பிரவுன் கொல்லப்பட்ட போது நடந்த வன்முறைகளை விட மிகவும் அதிகமாக மக்களின் கோபம் கட்டுக்கடங்காத வன்முறைகளக வெடித்துள்ளன.
முதலாளித்துவ ஜனநாயகம் காலாவதியாகிப்போன காலப்பகுதியை உலகம் கடந்து சென்றுகொண்டிருக்கிறது. நிறவாதம் கலந்த ஏகபோக அமைப்பு கறுப்பின மக்களை வறுமையின் விழிபிற்குள்ளேயே வைத்துள்ளது.
வெள்ளை மேலாதிக்கவாதிகளும் அமெரிக்க அதிகார வர்க்கமும், சட்டமும் ஒழுங்கும் நீதியும் கறுப்பினத்தவர்களுக்கும் உழைக்கும் மக்களுக்குமானதல்ல என மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.
கொலையாளியை நிரபராதியாக்கிய தீர்ப்பு வெளியானதும் மிசோரி மானிலத்தின் முதல்வர் ஜே வில்சன் 30 நாட்கள் அவசரகாலச் சட்டத்தை நிறைவேற்றினார். ஒப்பிட்டளவில் சிறிய மாநிலமான மிசோரியில் ஒரு லட்சம் டொலர்கள் பெறுமதியான கலகம் அடக்கும் சாதனங்கள் குவிக்கப்பட்டன.
ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பித்ததும் போலிசின் வன்முறை ஆரம்பமானது. குவிக்கப்பட்டிருந்த கலகமடக்கும் படையினரும் போலிசாரும் மக்கள் மீது தாக்குதலை ஆரம்பித்தனர்.
மக்கள் எதிர்த்துப் போராட ஆரம்பித்தனர். போலிஸ் வன்முறைக்கு எதிரான தற்காப்பு யுத்தம் போன்ற இந்த ஆரம்பம் மிசோரி மானிலத்தை பாலஸ்தினமாக்கியது. மக்கள் கற்களையும் , போத்தல்களையும் போலிசார் மீது வீசிப் போராட்டம் நடத்தினர். அன்னிய தேசங்களை ஆக்கிரமித்துப் பழக்கப்பட்ட அமெரிக்க அதிகாரவர்க்கம் தனது உள் நாட்டிலேயே
போராட்டத்தை அனுபவிக்க ஆரம்பித்தது. வாகனங்களும், வியாபார நிலையங்கள் சிலவும் தீக்கிரையாக்கப்படன.
பல்வேறு இடங்களைத் தீ தின்றுள்ளதால் தீயணைக்கும் படையினர் தீயை நிறுத்த முடியாமல் திண்டாடுவதாக சென்ட் லுயீஸ் போலிஸ் அதிபர் ஜொன் பெல்மர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். 29 ஆர்ப்பாட்டக காரர்களைக் கைது செய்து சிறையிலடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நேரில் கண்ட சாட்சிகளின் அடிப்படையில் மைக்கல் பிரவுண் கைகளை உயர்த்திச் சரணடையும் நிலையிலிருந்த வேளையிலேயே போலிஸ் அவரைப் படுகொலை செய்துள்ளது. அமெரிக்காவின் பல நகரங்களை நோக்கி விரிவடைந்துள்ள ஆர்ப்பாட்டத்தில் வெள்ளையினத்தைச் சேர்ந்த ஜனநாயக முற்போக்கு சக்திகளும், இடதுசாரிகளும் கறுப்பினத்தவர்களுக்கு ஆதரவாகக் கலந்துகொள்கின்றனர்.
அமெரிக்க அதிகாரவர்க்கம் தனது பிரதிநிதியாகப் போலி ஜனநாயகாத்தின் ஊடாக நியமித்த அரைக் கறுப்பரான ஒபாமா நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று உரையாற்றியுள்ளார். கறுப்பின மக்களும் போராடும் ஏனையோரும் ஒபாமாவை ஏற்றுக்கொள்ளவில்லை. போராட்டம் தொடர்கிறது.