Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பேரினவாத போர் வெறியால் ஈழத் தமிழர்கள் முடமாகி மாற்றுத் திறனாளிகள் உருவாக காரணமாக இருந்துவிட்ட கருணாநிதி

வை.கோ இன்று கருணாநிதியைச் சாடிய அறிக்கை:

“கேள்வியும் நானே, பதிலும் நானே என்று 03.12.2010 அன்று வெளியிட்ட முதல்வர் கருணாநிதியின் அறிக்கையில் மாற்றுத் திறனாளிகளுக்குத் தொலைநோக்குடன் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கும் என்று அந்த அறிக்கையை படித்துவிட்டு மிகுந்த மனவேதனையும் ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.

சமூக நலத்துறை அமைச்சரின் தலைமையில் 5.1.2010 அன்று நடந்த கூட்டத்திற்கு பின் 27.3.2010 அன்று மாற்றுத் திறனாளிகளுக்காக தனித்துறை முதல்வரின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டடது.

22.4.2010 அன்று முதல்வரே மாற்றுத் திறனாளிகளின் வாரியத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு, மகள் கனிமொழி வாரியத்தின் ஆலோசகராகவும் தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் வேண்டப்பட்டவர்களை வாரிய உறுப்பினர்களாக நியமித்தபின் மூன்று மாதத்திற்கு ஒருமுறை கூட்டப்பட வேண்டிய கூட்டம் இதுநாள்வரை எத்தனை நடந்துள்ளது? கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன? என்பதை நாட்டு மக்கள் அறிய ஆவலாக உள்ளனர்.

‘இளைஞன்’ திரைப்படம் திரைக்கு வருவதற்கு முன்னமே வருமானவரித் தொகை போக ரூ.45 லட்சத்தை பெற்று மாற்றுத் திறனாளிகள் வாரியத்திற்காகச் செலவிட வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக வாரியத் தலைவராக இருக்கும் முதல்வர் ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளார்.

இது எப்படி இருக்கிறது என்றால், அறிவாலயத்தில் இயங்கி வரும் திமுக அலுவலகத்துக்கு அதன் தலைவராக இருக்கும் கருணாநிதி, மாதந்தோறும் வாடகைப் பணத்தை அறிவாலயத் தலைவராக இருக்கும் கருணாநிதியிடம் வழங்கி வருவதைப் போன்றது.

சினிமா வசனகர்த்தா கதையாசிரியர் கருணாநிதி, மாற்றுத் திறனாளிகள் நலவாரியத் தலைவர் கருணாநிதியிடம் கதை வசனம் எழுதி கிடைத்த பணத்தை வாரியத்தின் கூட்டம் கூட்டப்படாமல் வாரியத்தின் ஒப்புதல் இல்லாமலே செலவு செய்யக் கொடுத்துள்ளது விஞ்ஞான பூர்வமான அணுகுமுறை.

மேலும், 4 1/2 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் இதுவரை 4 லட்சத்து 80 ஆயிரத்து 466 பேர்களுக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. இதில் மாற்றுத் திறனாளிகளுக்கு நியாயமாக கிடைக்கப்பட வேண்டிய மூன்று சதவிகித அரசுப்பணி வழங்கப்பட்டிருக்குமேயானால் 14 ஆயிரம் பேர் பயனடைந்திருக்க வேண்டும்.

ஆனால், பாட்டும் நானே, பாவமும் நானே என்று கேள்வி பதில் அறிக்கையில் 3,169 பேருக்கு மட்டும் அரசுப்பணி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி மூன்று சதவிகித பணி வழங்கப்படாததை அவரே ஒப்புக் கொண்டுள்ளார். அப்படி இருக்கையில் அரசுத் துறைகளில் மூன்று சதவீத இட ஒதுக்கீட்டினைக் கண்காணிக்க உயர்மட்டக்குழு அமைத்துள்ளது, மாற்றுத் திறனாளிகளை ஏமாற்றிடும் கண்துடைப்பு நாடகமே தவிர வேறு என்ன?

அதே அறிக்கையில் மாற்றுத் திறனாளிகளுக்காக 2010-11 ஆம் ஆண்டு ரூ.113 கோடி நிதி ஒதுக்கப்பட்டதாகவும், 3.12.2010 அன்று மாற்றுத் திறனாளிகள் தினத்தன்று வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் கூட்டத்தில் பேசிய துணை முதல்வரும், சமூக நலத்துறை அமைச்சரும் முன்னுக்குப் பின் முரணாக தகவல்களைப் பேசியதில் இருந்து இந்த ஆட்சி மாற்றுத் திறனாளிகளின் பிரச்சனையை சமூக பிரச்னையாக அணுகவில்லை என்பது தெரிகிறது. மாற்றுத் திறனாளிகள் கேட்பது சலுகைகள் அல்ல; உரிமையை கேட்கிறார்கள்; அதற்காகப் போராடுகிறார்கள்.

இந்திய சிங்களப் பேரினவாத போர் வெறியால் ஈழத் தமிழர்கள் முடமாகி எண்ணற்ற மாற்றுத் திறனாளிகள் உருவாக காரணமாக இருந்துவிட்ட கருணாநிதி, பாதிப்புக்குள்ளான மாற்றுத் திறனாளிகளின் துயர் துடைக்க அறிக்கை விட்டால் தங்களைத் தலைவர்கள் என்று கருதி அறிக்கை விடுவதாக பிரச்சனையைத் திசை திருப்ப நினைக்கிறார்”

Exit mobile version