இலங்கைப் பேரினவாத அரசாங்கத்தால் வன்னித் தடுப்பு முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டு உடல் உளவியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்ட வன்னி மக்கள் தெருக்களில் அனாதைகளாக எந்தத உதவியுமின்றி அவலத்திற்கு உள்ளாகியுள்ளனர். அவர்களுக்கு வழங்கப்படும் உதவிகளை அரசாங்கம் தடுத்துவருகிறது. இந்த நிலையில் வட கிழக்கில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை பேரினவாத அரசு மேற்கொண்டுவருகிறது. வடக்கில் சிங்களக் குடியேற்றங்கள் குறித்து இன்று நடைபெற்ற தமழ்க் கட்சிகள் அரங்கக் கூட்டத்தில் சிவாஜிலிங்கம் பிரஸ்தாபித்தார். இதற்குப் பதிலளித்த ராஜபக்ச தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் கொழும்பில் வசிக்கும் போது சிங்களவர்கள் ஏன் வடக்கில் மீள்குடியேற முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார். தவிர, அரசியல் கைதிகள் மற்றும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கைதிகளை விரைவில் விடுதலை செய்ய முடியாது. சிறு குற்றம் புரிந்தவர்களை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து கட்டம்கட்டமாக விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு சட்டமா அதிபருக்கு நான் வலியுறுத்துகின்றேன் என தெரிவித்தார். தமிழ்ப் பேசும் மக்களின் இனச்சுத்திகரிப்பின் இன்னொரு வடிவமாகவே திட்டமிட்ட குடியேற்றங்கள் நடைபெறுகின்றன. இந்த நிலையில் ஒரு நாட்டின் ஜனாதிபதி சிங்கள மக்களின் வக்கீல் போல பேரினவாதத் தீயில் எண்ணைவார்த்துள்ளார். இவை தவிர வடகிழக்கிலிருந்து இராணுவ முகாம்களை அகற்ற முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.