இன்று மீண்டும் பாராளுமன்றம் சென்று ஆட்சியைப் பெற்று தமிழ் மக்களின் தலைவிதியை மாற்றுவோம் என மக்களை ஏமாற்றும் கட்சிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் சுய நிர்ணையக் கோரிக்கைக்குப் பதிலாக இனவாதத்தின் ஊடாக மக்களை உருவேற்ற ஆரம்பித்துள்ளன.
சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் இனவாதத்திற்கான போராட்டமல்ல. தேசிய இனம் ஒன்று பிரிந்து செல்லும் உரிமைக்கு உரித்துடையதாகும்.
அவ்வாறு பிரிந்துசெல்லும் உரிமை வழங்கப்பட்டால் அது இணைந்து வாழ்வதற்கான வழிகளைத் திறந்துவிடும் என்பதைச் சிங்கள மக்களுக்குச் சொல்வதற்கான குறைந்தபட்ச வழிமுறையாகத் தேர்தலைப் பயன்படுத்தியிருக்கலாம்.
அதனை விடுத்து அமெரிக்காவைக் கூட்டிவந்து இலங்கையை அழித்து நாமும் அழிந்து போவோம் என்ற கோதாவில் வாக்குப் பொறுக்கும் கட்சிகள் கூச்சலிட்டு அப்பாவி மக்களை உணர்ச்சிவசப்படுத்த தேர்தல் வியாபாரம் உச்சமடைகிறது.
இந்த நிலையில் பாராளுமன்ற ஜனநாயகத்தையும் ஒற்றையாட்சி முறையையும் நிராகரித்து தேர்தலைப் பகிஷ்கரிக்க தமிழ் அரசியல் தலைமைகள் முன்வராமையால் பேரினவாதிகள் தமிழ்ப் பகுதிகளில் கடைவிரிக்க ஆரம்பித்துள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – கஜேந்திரகுமார் குழுவின் தெருச் சண்டையில் உடைந்து சிதறும் வாக்குகளைக் கைப்பற்றும் நோக்கில் மைத்திரிபால சிரிசேன யாழ்ப்பாணம் சென்று வழமையான தனது பாணியில் காணாமல் போனோர் தொடர்பான மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.