Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பேராசிரியர் கைலாசபதியை திட்டமிட்டே தாழ்த்திக் காட்டுவதற்கான பல முயற்சிகள் ஆக்கங்களாக வெளிவந்திருக்கின்றன:பேராசிரியர் சிவசேகரம்.

09.12.2008.

கைலாசபதி என்கிற ஒரு மனிதரை நாம் ஒவ்வொருவரும் எமது சமூக அக்கறை, துறைசார்ந்த ஈடுபாடு என்பவற்றின் அடிப்படையிலேயே விளங்கிக் கொள்கிறோம். குடும்பம், உறவு, நண்பர்கள் சார்ந்து அவரது அறிவும் அனுபவமும் அவரை கூடுதலாக அடையாளப்படுத்துமெனினும், அவற்றுக்கும் அப்பால் சமூகம் அவரை அடையாளம் காணுகிறது. இந்த அடையாளத்தில் கைலாசாபதி சமூகத்துக்கு வழங்கிய பங்களிப்புக்களே முதன்மை பெறுகின்றன.அவரது மகத்தான பங்களிப்புக்கள் காலம் சென்ற பின்னரும் ஆவணப்படுத்தப்பட்ட அவரது எழுத்துக்கள் படைப்புக்கள் இதனை சிறப்பாக வெளிப்படுத்துகின்றன.

இது ஒரு புறமிருக்க, பேராசிரியர் கைலாசபதியை திட்டமிட்டே தாழ்த்திக் காட்டுவதற்கான பல முயற்சிகள் ஆக்கங்களாக வெளிவந்திருக்கின்றன. இது வெறுமனே அவரது ஆளுமை பற்றிய தனிப்பட்ட பொறாமை காரணமாக அல்ல. அவருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளின் வெளிப்பாடு மட்டும் அல்ல. அவரைத் தாக்குவது போல அவரது சமூக அடையாளத்தை திரிக்கிற முயற்சியும் இடம்பெற்றுள்ளன. இவை, அவரது எதிரிகள் செய்கின்ற காரியங்களை விட ஆபத்தானவை .

ஈழத்து மக்கள் இலக்கிய முன்னோடியும், தமிழ் இலக்கிய ஆய்வுப் பரப்பை செழுமைப்படுத்தியவருமான பேராசிரியர் க.கைலாசபதியின் 26 ஆவது ஆண்டு நினைவு “பவள விழா’ கொழும்பு தமிழ்ச் சங்கத்தில், சனிக்கிழமை நடைபெற்றபோது, கைலாசபதி; ஆள் அமைப்புஆளுமை என்ற தலைப்பில் கைலாசபதியின் தனித்துவம் பற்றி உரையாற்றுகையிலேயே சிவசேகரம் இவ்வாறு குறிப்பிட்டார்.

சிவசேகரம்,தனது உரையில்,  

ஒரு அமைப்புடன் சார்ந்து செயல்படுகிறபோது பிறருடன் தன்னை இணைத்துக் கொண்டு இயங்குவதற்கு கட்டுக் கோப்பான செயற்பாடு அவசியமானது என்பதை பேராசிரியர் கைலாசபதி பணியாற்றிய ஒவ்வொரு அமைப்பிலும் அதன் தளத்திலும் இனங்காணக்கூடியதாக இருந்ததாக தெரிவித்தார்.

இந்த அனுபவத்தில் ஒரு மனிதனிடம் இயல்பாக இருக்கக் கூடிய நற்பண்புகள் சமூகத்துடன் அவர் பேணுகின்ற உறவின் அடிப்படையிலேயே விருத்தி பெறுகின்றது என்பதை உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

தேசிய கலை இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் அதன் பொதுச் செயலாளர் இ.தம்பையா தலைமையில், பேரவைக் கீதத்துடன் ஆரம்பமான இந்த நினைவுதின நிகழ்வில், சோ.தேவராஜா தொடக்கவுரையாற்றினார்.

இரு அமர்வுகளாக,காலை 9 மணி முதல் பி.பகல் ஒரு மணி வரையும் பின்னர் 2 மணியிலிருந்து 6 மணிவரையும் முழு நாள் நிகழ்வாக இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நவீன தமிழ் இலக்கியத்தின் அடிப்படைகள், பொதுவுடைமைச் சிந்தனை, தேசிய இலக்கியம், தமிழ் தேசியம், ஆள்அமைப்புஆளுமை, சமயமும் சமூகமும், பெண் விடுதலை, திறனாய்வுக் கொள்கை, காதலும் மணவாழ்வும், பாரதி, கல்வி பற்றிய நோக்கு,நாவல் இலக்கியம் ஆகிய தலைப்புக்களில்,பேராசிரியர் கைலாசபதியின் வகி பங்கு பற்றி ஆய்வுரைகளும் கருத்துரைகளும் இடம் பெற்றன.

கைலாசபதியும் பொதுவுடைமைச் சிந்தனையும் என்ற தலைப்பில் உரையாற்றிய தேசிய கலை இலக்கியப் பேரவையின் பொதுச் செயலாளர் இ.தம்பையா கைலாசபதி தனது வாழ்நாளில், மார்க்ஸிச தத்துவார்த்த உலக நோக்கை, வெறுமனே தனது இலக்கியத் திறனாய்வுத் தேவைக்கும் விமர்சன நோக்கிற்கும் பயன்படுத்தியவரல்ல. மார்க்ஸிசத்தின் அறிவியல் நெறி சார்ந்த நடைமுறை உண்மைகளை கண்டறிந்தவர் என்றார்.

“கைலாசபதியும் தமிழ்த் தேசியமும்’ என்ற தலைப்பில் உரையாற்றிய தெ.ஞா. மீனிலங்கோ இலங்கையில் இனத்துவமும் சமூக மாற்றமும் என்ற நூலில் தமிழ்த் தேசியம் தொடர்பாக கைலாசபதி குறிப்பிட்டிருந்த வாசகத்தை கவனத்தில் கொண்டு வந்தார்.

“தமிழ்த் தேசியம் இன்று முக்கியமான திருப்பு முனையில் உள்ளது. தனக்கு முன் உள்ள இரு வழிகளில் ஏதாவது ஒன்றை அது தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. ஒன்று தனிமைப்பாடு மற்றும் மேலாதிக்கத்தை சார்தல்; மற்றது பெரும்பான்மைச் சமூகத்துக்கும் தனக்கும் பொதுப் படையான அம்சங்களை இனங் கண்டு ஜனநாயக முறையிலான வாழ்க்கை மலர உழைத்தல் என கைலாசபதி அவரது புத்தகத்தில் குறிப்பிட்டிருந்ததை சுட்டிக் காட்டினார்.

இறுதி நிகழ்வுகளாக, அடியும் முடியும் கவியரங்கு, கலாலட்சுமி தேவராஜாவின் தனிப்பாடல் மற்றும் சதாபாஸ்கியின் “எனக்குள்ளே’ என்னும் தலைப்பில் தனியாள் அரங்க ஆற்றுகையும் இடம்பெற்றது.

Exit mobile version