முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடு பகுதியில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 90 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
விசுவமடுவின் வடக்குப் பகுதியில் உள்ள இடைத்தங்கல் முகாமில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்தார்.
இதில் சிறிலங்கா படையைச் சேர்ந்த 2 அதிகாரிகள், 18 படையினர் உட்பட 28 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இத்தாக்குதலில் மேலும் 2 அதிகாரிகளும் 48 படையினர் உட்பட 90 பேர் படுகாயமடைந்துள்ளதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளதாக புதினம் இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வரும் பொதுமக்களுடன் சேர்ந்து வந்த பெண் தற்கொலைக் குண்டுதாரி ஒருவரே இடைத்தங்கல் முகாமில் வைத்து குண்டினை வெடிக்க வைத்துள்ளதாகத் தெரியவருகிறது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் வரும் மக்களைச் சோதனைக்குட்படுத்தும் இடத்திலேயே இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றது.
விடுதலைப் புலிகளின் குண்டுகளுக்கு அப்பாவிப் பொதுமக்கள் பலியானது இப்போது வெளிப்படையாகத் தெரிய வந்துள்ளது.
மக்களைப் பாதுகாப்பு வலையங்களை நோக்கி வெளியேறுவதைத் தடுப்பதற்கான வெளிப்படையான நடவடிக்கை என அமரிக்க அரசு தெரிவித்ததாக ரொய்ட்டர் செய்தி அமைப்பு செய்தி வெளியிட்டுள்ளது.