உதயகுமார் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
கூடங்குளம் கடற்கரையில் நிராயுதபாணிகளான கூடியிருந்த பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கண்ணீர்புகை குண்டுகளை வீசி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதன் மூலம் தமது பாசிச முகத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.
நான் தற்போது இடிந்தகரையில்தான் இருக்கிறேன். இருப்பினும் சற்று தள்ளி இருப்பதால் போலீசாரின் தாக்குதலில் எத்தனை பேர் படுகாயமடைந்தனர்? கைது செய்யப்பட்டனர் என்ற விவரம் தெரியவில்லை. கடலுக்குள் போனவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை.
காவல்துறையினர் எங்களுடன் பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை. எங்களைத் தேடித்தான் பொதுமக்களை அச்சுறுத்தியிருக்கின்றனர்.
நாங்கள் அணு உலைக்கோ அல்லது அணு உலைக்கு சென்ற ஊழியர்களை தடுக்கவோ இல்லை. அமைதியான அறவழியில் போராடினோம். எங்கள் போராட்டம் காந்திய வழியில் தொடரும். இந்தியா முழுவதும் அணு உலைக்கு எதிரான போராட்டம் தீவிரமடையும் என்றார் அவர்.
கூடங்குளம் அணுஉலையை முற்றுகையிட முயன்ற பொதுமக்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதைத் தொடர்ந்து போராட்ட ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் உள்பட 3 பேரை படகில் ஏற்றி மக்கள் அனுப்பி வைத்தனர்.