Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பெரியார் படைப்புகள்: வெளியிட பெரியார் தி.க.வுக்கு தடை .

31.08.2008

சென்னை: பெரியாரின் கட்டுரைகள், எழுத்துக்கள் உள்ளிட்டவற்றை நூல்களாக வெளியிட பெரியார் திராவிடர் கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

பெரியார் திராவிடர் கழகம் இந்த நூல்களை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரி திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

அதில், குடியரசு பத்திரிகையில் வந்த பெரியாரின் சொற்பொழிவுகள், கட்டுரைகள், எழுத்துக்களை புத்தகமாகவும், சிடியாகவும் வெளியிடப்போவதாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்துள்ளது. இதன் வெளியீட்டு விழா செப்டம்பர் 17ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தந்தை பெரியார் கடந்த 1952ம் ஆண்டு பெரியார் சுய மரியாதை பிரச்சார ஸ்தாபனம் என்ற அமைப்பை துவங்கினார். அதில் 1925ல் தொடங்கப்பட்ட குடியரசு பத்திரிகையில் வெளியான தன்னுடைய கட்டுரைகள், பேச்சுக்கள், எழுத்துக்கள் ஆகியவற்றை நூல்களாக அச்சிட்டு இந்த அறக்கட்டளை மூலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட வேண்டும் என்று பெரியார் கூறியுள்ளார்.

மேலும் அதன் மூலம் கிடைக்கும் வருவாயை அனாதை, வயதான, ஆதரவற்ற இல்லம் அமைத்து அவர்களுக்கு உதவிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் 1982ல் குடியரசு பத்திரிக்கையின் நகல்கள் எடுக்கப்பட்டன. அந்த சமயத்தில் இந்த நூல்கள் திருடப்பட்டுள்ளன. தஞ்சை பகுத்தறிவாளர் கழகத்திடமிருந்து இதன் நகல்களை தாங்கள் பெற்றதாக பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் ராமகிருஷ்ணன் வார பத்திரிகையில் பேட்டியளித்துள்ளார். இது முற்றிலும் பொய்யானது.

ஆகவே குடியரசு பத்திரிகையில் வெளியான பெரியாரின் கட்டுரைகள், பேச்சுக்கள், எழுத்துக்கள் ஆகியவற்றை பெரியார் திராவிடர் கழகம் புத்தகமாகவும், சிடியாகவும் வெளியிட தடைவிதிக்க வேண்டும். நஷ்ட ஈடாக ரூ.15 லட்சம் கொடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயபால், புத்தகம், சிடி வெளியிட தடைவிதித்ததோடு, இந்த விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

Exit mobile version