பெண்களுக்கு இயர்க்கையாக ஏற்படும் உதிரப் போக்கை மாதவிடாய் என்று தமிழ் சமூகத்தில் கூறுவர். மாதவிடாய் காலத்தில் கடுமையான வயிற்றுவலியால் பெண்கள் அவஸ்தைக் குள்ளாகிறார்கள். கடுமையான உடல்வலியோடு, அதிகமான மன அழுத்தத்திற்கும் மூன்றூ நாட்கள் பெண்கள் அவஸ்தைப்படுகிறார்கள். இம்மாதிரியான பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் கடுமையான வயிற்றுவலியைக் குறைப்பதற்கு புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் “விஏ111913′ எனும் மாத்திரையைத் தயாரித்துள்ளனர். இந்த மாத்திரை, பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் கர்ப்பப்பை சுருங்குவதால் ஏற்படும் வயிற்றுவலியைக் குறைக்கும். இந்த மாத்திரை வாசோபிரிசின் எனும் ஹார்மோனை உற்பத்திசெய்து அதன்மூலம் கர்ப்பப்பை சுருங்குவதற்குக் காரணமான தசைகளைக் கட்டுப்படுத்துவதால் வயிற்றுவலி குறையும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். “மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் கடுமையான வயிற்றுவலி காரணமாக பெண்கள் மிகவும் துன்பப்படுகின்றனர். இத்துன்பத்தை போக்கும் நிவாரணியாக இம்மருந்து அமைந்திருப்பது அறிவியல் உலகில் மிகப்பெரிய முன்னேற்றம் ஆகும். வான்ஷியா தெரபியுடிக்ஸ் என்கிற மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் ஜிம் பிலிப்ஸ் என்பவர் விஏ111913 மருந்து கண்டுபிடிப்பதற்கு பின்புலமாக செயல்பட்டுள்ளார்‘ என்று டெய்லி டெலகிராப் செய்திநிறுவனம் தெரிவித்துள்ளது. முதல் பரிசோதனையில், இந்த புதிய மருந்து (விஏ111913) பாதுகாப்பானது என்றும், சிறிதளவே பக்கவிளைவுகள் தரக்கூடியது என்றும் ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 18 முதல் 35 வயதுக்குள்பட்ட பெண்களிடம் நடத்த இருக்கும் இரண்டாவது பரிசோதனையும் வெற்றிகரமாக முடிந்தால், இன்னும் 4 ஆண்டுகளில் இம்மருந்து எல்லா இடங்களிலும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.