பெண்களை பாலியல் அடிமைகளாக கடத்துவதற்கு எதிராக கூட்டு நடவடிக்கை எடுக்க ஆசியாவின் போலீஸ் அதிகாரிகள் இணங்கியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் ஆசிய போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்ட ஒரு கூட்டத்திலேயே இதற்கான உடன்பாடு எட்டப்பட்டது.
முன்னர் அறியப்பட்டிருந்ததை விட பெண்களை பாலியல் அடிமைகளாக வியாபாரம் செய்யும் தொழில் அதிக அளவில் திட்டமிட்டு நடத்தப்படுவதாக இந்த போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்ட மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.
பெரும்பாலும் தென்கிழக்கு ஆசியாவிலிருந்தே, ஆஸ்திரேலியாவுக்கு பாலியல் தொழிலுக்காக மக்கள் அடிமைகளாக கடத்தப்படுகிறார்கள் என்று கான்பெராவிலுள்ள ஆஸ்திரேலிய அதிகாரிகள் நம்புகிறார்கள்.
குறிப்பிட்ட சிலர் கூட்டணி அமைத்து, இவ்வாறு பெண்கள் பாலியல் அடிமைகளாக கடத்தப்படுவதாகவும் போலீஸ் அதிகாரிகளின் இந்த மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறு பாலியல் தொழிலுக்கென அடிமைகளாக எவ்வளவு பேர் கடத்தப்படுகிறார்கள் என்பது தொடர்பில் நம்பகத் தகுந்த அளவில் தகவல்கள் இல்லை என்றாலும் பல்வேறு கணக்கீடுகளின்படி ஆயிரம் பேர் வரை இப்படி கடத்தப்படுவதாக கூறப்படுகிறது.